பள்ளி பொதுத்தேர்வு முடியும் வரை தடையில்லா மின்சாரம் எதிர்பார்ப்பு
பள்ளி பொதுத்தேர்வு முடியும் வரை தடையில்லா மின்சாரம் எதிர்பார்ப்பு
UPDATED : மார் 01, 2025 12:00 AM
ADDED : மார் 01, 2025 09:56 AM
பொள்ளாச்சி:
பொதுத்தேர்வு முடியும் வரை, தடையில்லா மின்சார வினியோகத்தை துறை ரீதியான அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ், பொதுத்தேர்வு மார்ச் மாதம் துவங்குகிறது. அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களும் பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் தினமும் காலை நேரத்திலும், இரவிலும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், வீடு, வணிக கடைகளில் பழுது ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஆங்காங்கே உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் துண்டிப்பு செய்து, சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு, 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆவதால், அப்பகுதியில் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் பாதிக்கின்றனர்.
மாணவர்கள் கூறுகையில், பொதுத்தேர்வு மையங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க, மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல, குடியிருப்பு பகுதிகளிலும், முடிந்தவரை, மின் நிறுத்தம் செய்யும் நேரத்தை குறைக்க வேண்டும்.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இரவில் படிக்கும் வகையில், 24 மணி நேரமும் மின் வினியோகம் இருக்க, மின்வாரியத்தின் கீழ் அனைத்து பிரிவு அலுவலர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும், என்றனர்.