UPDATED : மார் 01, 2025 12:00 AM
ADDED : மார் 01, 2025 09:54 AM
பெ.நா.பாளையம்:
மனதை எவ்வித குற்றமும் இல்லாமல், தூய்மையாக வைத்துக் கொள்வதே சிறந்த அறம் என, ஓய்வு பெற்ற பேராசிரியர் வேலுச்சாமி பேசினார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இதில், பள்ளி படிப்பை முடித்துச் செல்லும் சிறந்த மாணவர்களுக்கு முதல் பரிசாக, 8ம் வகுப்பு மாணவி தன்யஸ்ரீக்கு, 5 ஆயிரம் ரூபாயும், சிறந்த மாணவரான சைலேஷ் தேவ், 4 ஆயிரம் ரூபாயும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை முன்னாள் பேராசிரியர் வேலுச்சாமி பேசுகையில், மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பதை உணர்ந்து கொண்டாலே, உலகில் உயர்ந்த மனிதனாக உருவெடுக்க முடியும். அதாவது, நம்முடைய மனதை குற்றம் எதுவும் இல்லாமல், துாய்மையாக வைத்துக் கொள்வதே சிறந்த அறம் என, வள்ளுவர் குறிப்பிடுகின்றார். மனதை குற்றமில்லாமல், துாய்மையாக வைத்துக் கொள்ள நான்கு விஷயங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். பொறாமை கூடாது.
வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் பிறரை பார்த்து பொறாமைப்படுதல் கூடாது. அது நம் வாழ்க்கையை கீழே கொண்டு சென்று விடும். இரண்டாவதாக ஆசை. ஆசை அழிவுக்கு வித்தாகும். நியாயமான ஆசைகள் வேண்டும்.
ஆனால், மனம் போனா போக்கில் ஆசை இருக்கக் கூடாது. அது நம் வாழ்க்கையை அழித்துவிடும். மூன்றாவதாக கோபம். எந்த ஒரு பெரிய மனிதரையும் கோபம் அழித்து விடும். நான்காவதாக கடுஞ்சொல் கூறுதல் கூடாது. யாரிடமும் அன்பாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் நாமும் முன்னேறி, பிறரையும் முன்னேறச் செய்து, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார்.
தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உலக அறிவியல் தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
விழாவில், விழாவில், கூடலுார் நகராட்சி தலைவர் அறிவரசு, தலைமை ஆசிரியர் லோகநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.