கல்வி நிறுவன கட்டட வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு
கல்வி நிறுவன கட்டட வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:49 PM
சென்னை:
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறை செய்ய ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2011க்கு முன் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்யும் திட்டம் 2018ல் அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் மீண்டும் அவகாசம் அளிக்க கோரிக்கை எழுந்தது.
இதன் அடிப்படையில் 6 மாதம் கூடுதல் அவகாசம் அளிக்கலாம் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா ஜூலையில் உத்தரவிட்டார்.
இதையடுத்து நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
விதிகளை மீறி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த 2025 ஜன., 31 வரை விண்ணப்பிக்கலாம். இன்று முதல் இந்த கூடுதல் அவகாசம் அமலுக்கு வருகிறது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள www.tcp.org.in என்ற இணையதளம் வாயிலாக கட்டட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.