'அக் ஷய பாத்ரா' திட்டத்திற்கு நிதியுதவி ஜன., 10ல் இளையராஜா இசை நிகழ்ச்சி
'அக் ஷய பாத்ரா' திட்டத்திற்கு நிதியுதவி ஜன., 10ல் இளையராஜா இசை நிகழ்ச்சி
UPDATED : டிச 16, 2025 09:03 PM
ADDED : டிச 16, 2025 09:04 PM
ராஜாஜிநகர்:
அரசு, அரசு சாரா பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் 'அக் ஷய பாத்ரா' திட்டத்திற்கு நிதி உதவி வழங்க, அடுத்த மாதம் 10ம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பெங்களூரில் நடக்கிறது.
பெங்களூரு ராஜாஜி நகர் 1வது பிளாக்கில் உள்ள, உலக பிரசித்தி பெற்ற இஸ்கான் கோவில் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதர், 2000ல் துவங்கப்பட்ட 'அக் ஷய பாத்ரா' அறக்கட்டளையின் 25வது ஆண்டு சேவை, இளையராஜாவின் 50 ஆண்டு இசை சேவையை கொண்டாடும் வகையில், பிரமாண்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த மாதம், 10ம் தேதி மாதவாராவில் உள்ள நைஸ் மைதானத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. இளையராஜா, அவரது குழுவினர், 'எ ஜர்னி ஆப் லெஜண்ட்ஸ் மியூசிக்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியை, அக் ஷய பாத்ரா திட்டத்திற்கு வழங்க உள்ளனர்.
இதுதொடர்பான ஊடகத்தினர் சந்திப்பு, இஸ்கான் கோவிலில் உள்ள எம்.வி.டி., அரங்கில் நேற்று நடந்தது. அக் ஷய பாத்திர அறக்கட்டளை இணை நிறுவனர் ஸ்ரீசஞ்சலபதி தாஸ், இசை அமைப்பாளர் இளையராஜா, அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வெங்கட், இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் மெர்க்குரி புரொடக் ஷன்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் பக்திசரண் கலந்து கொண்டனர்.
ஸ்ரீசஞ்சலபதி தாஸ் கூறுகையில், ''பசியால் எந்த குழந்தையும் கல்வியை இழக்க கூடாது என்ற நோக்கில் எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட, அக் ஷய பாத்ரா திட்டம் இன்று பெரிய இயக்கமாக வளர்ந்து உள்ளது. தற்போது வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளது. இந்த பயணம் அரசுகள், நன்கொடையாளர்கள், பலரின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. இப்போது இளையராஜாவின் இசை சேவையும், எங்கள் அமைப்பின் வெள்ளி விழா கொண்டாட்டமும் ஒரே மேடையில் நடக்க உள்ளது,'' என்றார்.
இளையராஜா கூறுகையில், ''இந்த 50 ஆண்டுகளில் இசை எனக்கு அனைத்தையும் கொடுத்து உள்ளது. தற்போது இசையின் மூலம் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு, நிதி உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. குழந்தைகள் கல்வி கற்கவும், பசியை போக்கவும் இசை நிகழ்ச்சி உதவும் என்றால், இசைக்கும், ஒவ்வொரு தாளத்திற்கும் ஆழமான அர்த்தம் உள்ளது.
''உணவு, குழந்தையின் வாழ்க்கை திசையை எப்படி மாற்றும் என்பதை, அக் ஷய பாத்ரா அறக்கட்டளையின் பணி வெளிகாட்டுகிறது. இந்த பயணத்தில் அவர்களுடன் இணையும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்,'' என்றார்.

