மலர்க்கண்காட்சி: 2 நாட்களில் 18 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு
மலர்க்கண்காட்சி: 2 நாட்களில் 18 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு
UPDATED : பிப் 11, 2025 12:00 AM
ADDED : பிப் 11, 2025 10:21 AM

கோவை:
கோவை, வேளாண் பல்கலையில் நடந்து வரும் மலர்க் கண்காட்சியை இரண்டு நாட்களில் 18 ஆயிரம்பேர் கண்டுகளித்துள்ளனர்.
கோவை வேளாண் பல்கலை சார்பில் தாவரவியல் பூங்காவில், 7வது மலர்க் கண்காட்சி நடந்து வருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமான மலர்களைக் கொண்டு விதவிதமான உருவங்கள், அலங்கார வளைவுகள், அணிவரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மலரும் அரிய வகை மலர்கள் உட்பட அனைத்து வகையான மலர்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்த 8ம் தேதி மலர்க் கண்காட்சி துவங்கியது. பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் மலர்க் கண்காட்சியைப் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
மலர்க்கொத்துகளால் ஆன, உருவங்கள் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. மலர்கள் தவிர, 25க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
60க்கும் மேற்பட்ட பழ வகைகளின் அணிவரிசையும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பூ, காய்கறி ரகங்களின் நாற்றுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டங்களுக்கான கிட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தோடு வருபவர்கள் நாற்றுகள், விதைகள் மற்றும் உரம் உள்ளிட்ட இடுபொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர்.
முதல்நாளில் 6,000 பேர் மலர்க் கண்காட்சியைப் பார்வையிட்டனர். 2ம் நாளான ஞாயிற்றுக்கிழமை 11,600 பேர் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர்.
நாளை வரை கண்காட்சி நடைபெறவுள்ளது. இன்று அரசு விடுமுறை என்பதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.