வனத்துறை சார்பில் மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி
வனத்துறை சார்பில் மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி
UPDATED : அக் 21, 2025 09:47 AM
ADDED : அக் 21, 2025 09:47 AM

நாமக்கல்:
நாமக்கல், நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், வனத்துறை சார்பில், மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கான காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி துவக்க விழா நடந்தது.
கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
வனத்துறை சார்பில், மாவட்ட காலநிலை மாற்றும் இயக்கத்தின் கீழ் 'எவ்வாறு உங்கள் பள்ளியை பசுமையாக்குவது' என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களுக்கான காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி நடந்து வருகிறது. மனிதன் தன்னுடைய தேவைகளுக்காக காடுகளை அழிப்பது, காலநிலை மாற்றம், விவசாயத்தில் உயிர் கொல்லி பயன்படுத்துவது, மொபைல் போன், கணினி பயன்பாடு அதிகரிப்பு, மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், பசுமை பரப்பு குறைத்து, புவி வெப்பமடைதல் அதிகரிக்கிறது.
வளர்ச்சியில் சமநிலையில் இருப்பதோடு, நமது சுற்றுச்சூழலையும் நாம் பேணி பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு சுகாதாரமான, பாதுகாப்பான இயற்கையை நாம் வழங்க வேண்டும். எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வகையில், சைக்கிள்களை பயன்படுத்தலாம். பசுமை பரப்பை அதிகரித்தால் மட்டுமே காலநிலை சீராக அமையும். அதிகளவில் மரக்கன்றுகள் நடுவதன் மூலம், வருங்காலத்தில் துாய்மையான குடிநீர் கிடைக்கும். சுகாதாரமான காற்றோட்டம் அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வானவியல் விரிவாக்க அலுவலர் (பொ) செல்வகுமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் புருசோத்தமன், பள்ளி தலைமையாசிரியர் சாந்தி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.