சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி கட்டடம் சேதம்: நோயாளிகள் அச்சம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி கட்டடம் சேதம்: நோயாளிகள் அச்சம்
UPDATED : அக் 21, 2025 09:47 AM
ADDED : அக் 21, 2025 09:48 AM
சிவகங்கை:
சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டடங்கள் சேதம் அடைந்து ஆங்காங்கே விரிசல்கள் இருப்பதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அச்சப்படுகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மருத்துவமனை கட்டடம் 30 ஏக்கர் நிலப்பரப்பில் 114 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 800 படுக்கைகள் கொண்ட வார்டு உள்ளது.
கல்லுாரி வளாகத்தில் வெளி, உள் நோயாளிகள், தீவீர சிகிச்சை பிரிவு, ஆடிட்டோரியம், கல்லுாரி நுாலகம், விரிவுரை அரங்கு, தேர்வு கூடம், ரத்த வங்கி, டீன், டாக்டர், நர்சுகள் குடியிருப்பு, மாணவர்கள் விடுதி, தண்ணீர் மேல்தேக்க நீர்தொட்டி, உடற்பயிற்சி கூடம், உணவு விடுதி உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளது. இந்த கட்டடங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்க படாமல் உள்ளது. கட்டடங்கள் பின் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்ட லிப்ட்களில் பெரும்பாலானவை இயங்கவில்லை. கல்லுாரி வளாகத்தில் ரோடுகள் சேதமடைந்துள்ளன. கழிவு நீர் கால்வாய்களின் மேல் மூடி சேதமடைந்துள்ளதால், நோயாளிகள் கொசுக்கடி தொல்லையில் தவிக்கின்றனர்.