UPDATED : ஏப் 10, 2024 12:00 AM
ADDED : ஏப் 10, 2024 10:18 AM
கரூர்:
மாணவர்களுக்கு உதவித்தொகை வந்துள்ளதாக கூறி, வங்கி கணக்கில் மோசடி நடப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை மற்றும் சைபர் க்ரைம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு சார்பில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் கரூர் மாவட்டத்தில், 114 உயர்நிலை, அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ, மாணவிகளில், கே.ஒய்.சி., என்ற வங்கி கணக்கு சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அந்தந்த பள்ளிகளில், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மூலம் மொபைல் செயலி மூலம் பணிகள் நடக்கிறது. மாணவர், மாணவியர் தொடர்பாக விபரங்கள் லீக் ஆகி உள்ளது.
அரவக்குறிச்சி அருகே சின்னதாராபுரம் மாணவியிடம் பேசிய ஒருவர், கல்வி உதவித்தொகை வந்துள்ளதால், உங்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறி, மொபைல் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிய க்யூஆர் கோடு ஸ்கேன் செய்தவுடன், ஓ.டி.பி., எண்ணை கேட்டுள்ளனர். அதனை கூறியவுடன், அவரது வங்கி கணக்கில் இருந்து, 19 ஆயிரத்து, 998 ரூபாய் மோசடியாக எடுத்துள்ளார். இதுபோல கிருஷ்ணராயபுரம் மாணவ, மாணவியர் வங்கி கணக்கில் இருந்த பணம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை, சைபர் க்ரைம் சார்பில் பள்ளி தலைமையாசியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், கூறியிருப்பதாவது:
மத்திய, மாநில அரசுகளிடமிருந்து கல்வி உதவித்தொகை சம்மந்தமாக எந்த ஒரு அதிகாரியும் மொபைல் போனில் தொடர்பு கொள்ளமாட்டார்கள். கரூர் மாவட்டத்தில் பல மாணவ, மாணவிகளிடம் கல்வித்துறை அதிகாரிகள் என்று, தங்களை அறிமுகப்படுத்தி கொள்கின்றனர்.
பின், வாட்ஸ்ஆப் எண்ணிக்கு க்யூஆர் கோடு அனுப்பி வைக்கின்றனர். அதனை ஸ்கேன் செய்ய சொன்னவுடன், பணத்தை பறித்துள்ளனர். யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.