பாரதியார் பல்கலையில் இலவச கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு வாய்ப்பு
பாரதியார் பல்கலையில் இலவச கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு வாய்ப்பு
UPDATED : ஏப் 24, 2024 12:00 AM
ADDED : ஏப் 24, 2024 12:22 PM

கோவை:
ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் இலவச கல்வித்திட்டம் குறித்து, பாரதியார் பல்கலையில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
பாரதியார் பல்கலையில் கடந்த, 2006ம் ஆண்டு இலவச கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததால், 2017ல் இத்திட்டம் கைவிடப்பட்டது.
பல்வேறு தரப்பு கோரிக்கையை தொடர்ந்து, 2021ல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 2022-23ம் கல்வியாண்டில் ஒரு கல்லுாரிக்கு, 15 மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு, மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் வாயிலாக, ஒரு கல்லுாரியில், துறைக்கு மூன்று பேர் வீதம், கல்லுாரிக்கு 15 பேர் வீதம் சேர்த்துக்கொள்ள இயலும். இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தினால், பாரதியார் பல்கலையின் கீழ், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லுாரிகளில் சுமார், 1,500 ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெற இயலும்.
ஆனால், முக்கிய பதவிகள் காலியாகவுள்ளதால், பொறுப்பு வகித்த அதிகாரிகள் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில், முக்கியத்துவம் அளிக்கவில்லை. பல பொறுப்பாளர்களுக்கு இதுபோன்ற திட்டம் இருப்பதே தெரியவில்லை.
நடப்பாண்டில், விரைவில் முதலாமாண்டு சேர்க்கை துவங்கவுள்ள சூழலில், தற்போது வரை இலவச கல்வி செயல்படுத்துவது குறித்து, கல்லுாரிகளுக்கு தகவல்கள் அளிக்கப்படவில்லை.
மாணவர்கள் அணுகலாம்
கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில், பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும், மாணவர்கள் இலவச கல்வி திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்கலையின் அறிவிப்பு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தபின், அணுகி விண்ணப்பங்கள் பெறலாம். நடப்பாண்டில், ஒற்றை சாளர முறையில் விண்ணப்பங்களை பெற வேண்டும் என்றார்.
பல்கலை பதிவாளர் ரூபாவிடம் கேட்டபோது, கல்லுாரிகளுக்கு இலவச கல்வித்திட்டம் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கவுள்ளோம். ஒற்றை சாளர முறையில் விண்ணப்பங்கள் பெற ஆலோசனை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.