அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
UPDATED : அக் 30, 2026 06:13 PM
ADDED : அக் 30, 2026 06:15 PM
ராசிபுரம்:
தெத்துக்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், டி.என்.பி.எஸ்.சி., குரூப், 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.
ராசிபுரம் அடுத்த சேந்தமங்கலம் அருகே தெத்துக்காடு ஊராட்சியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியரின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில், தமிழக அரசு சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப், 4 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, இலவச பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து மாணவர்களிடையே பேசியதாவது:
'போட்டி தேர்வுகளை எவ்வித அச்சமுமின்றி, எவ்வாறு எதிர்கொள்வது என்பதை மாணவர்கள் முதலில் திட்டமிட வேண்டும். தேர்வில் வெற்றி பெறுவதற்கான முறையான அணுகுமுறைகள், தினசரி பாடத்திட்ட தயாரிப்பு மற்றும் நேர மேலாண்மை ஆகியவை மிக முக்கியம். தமிழகம் முழுவதும் நடக்கும் குரூப், 4 போட்டி தேர்வில் பல லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
கடுமையான போட்டி நிலவும் இச்சூழலில், கிராமப்புற மற்றும் ஏழை எளிய அரசு கல்லுாரி மாணவ, மாணவிகளும் எளிதில் வெற்றி பெற்று, அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே அரசு இதுபோன்ற இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறது.
கல்லுாரி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.'
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் விமல், பேராசிரியர்கள் பிரியங்கா, ராஜசேகர், தமிழரசி உட்பட பேராசிரியர்கள் மற்றும், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
