தலைமையாசிரியர் முதல் சி.இ.ஓ., வரை கல்வித்துறையில் காலியிடங்கள் ஏராளம்
தலைமையாசிரியர் முதல் சி.இ.ஓ., வரை கல்வித்துறையில் காலியிடங்கள் ஏராளம்
UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 10:54 AM

மதுரை:
தமிழக கல்வித்துறையில் தலைமையாசிரியர் முதல் சி.இ.ஓ.,க்கள் வரை ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக கிடப்பதால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் தற்போது 8 சி.இ.ஓ.,க்கள், 50 டி.இ.ஓ.,க்கள், 800க்கும் மேற்பட்ட உயர்நிலை, 1,000க்கும் மேற்பட்ட நடு, தொடக்க பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. வழக்குகள் இருந்தபோதும் அதற்கேற்ப அரசு, உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய அதிகாரிகள் ஆர்வம் காட்டி பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினர்.
ஆனால் அரசு நடுநிலை, தொடக்க பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு டி.இ.டி., கட்டாயம் என்ற முடிவுக்கு நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ள தமிழக அரசு, அதை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதில் தொடர்ந்து கோட்டை விடுகிறது. இதனால் தான் 1,000க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன என ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கல்வித்துறையில் நலத்திட்டங்களை வழங்குவது, மாணவர்கள் பயனடைந்துள்ள விவரம் சேகரிப்பு, நிதி செலவிடப்படும் திட்டங்களை முதல்வர், அமைச்சர்கள் துவக்கி வைப்பது என துறை சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஆனால் ஆசிரியர்கள் நியமனம், தலைமையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான கல்வியை மேம்படுத்தும் திட்டங்கள் மறைமுகமாக பின்னடைந்து வருகின்றன.
இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் என காலியாக கிடக்கும் பணியிடங்களை நிரப்புவதிலோ, பதவி உயர்வு வாயிலாக தலைமையாசிரியர் பதவி உயர்வு அளிப்பதிலோ எவ்வித அக்கறையும் துறை அதிகாரிகள் மேற்கொள்வதாக தெரியவில்லை. செப்.,10ல் காலாண்டு தேர்வு துவங்கும் நிலையில் தலைமையாசிரியர், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடப்பதால் ஆசிரியர், மாணவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கவுன்சிலிங் நடத்தி, ஜூனில் தேவை பணியிடங்களை நிரப்பி, ஜூலை 1ல் பள்ளிகள் முழுமையாக துவங்கும் என அதிகாரிகள் கூறி வருவது போல் தான் இத்துறையில் நடக்கிறதா என்பது அவர்களுக்கே வெளிச்சம். விரைவில் தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.