UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 10:53 AM
டில்லி:
டில்லியில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 10 பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மாணவர்கள் பலி
டில்லியில் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையினால், பழைய ராஜிந்தர் நகரில் செயல்பட்டு வந்த ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதில் சிக்கிய 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பயிற்சி மையங்கள் சட்டவிதிகளுக்குட்பட்டு முறையாக செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சோதனை
அதன்படி, டில்லியில் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, டில்லியில் உள்ள பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் பயிற்சி மையங்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சீல்
அப்போது, சஹாதரா, கரோல் பக், நஜாப்கர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 10 பயிற்சி மையங்களின் அடித்தளங்களில் விதிகளை மீறி அறைகளும், நூலகமும் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த அறைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
நம்பிக்கை
டில்லி மாநகராட்சி மேயர் ஷெல்லி ஓபராய் கூறியதாவது:
கிழக்கு டில்லியில் விதிகளை மீறி செயல்படும் பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடரும். இந்த நடவடிக்கைகளினால் அனைத்து மையங்களும் விதிகளுக்குட்பட்டு செயல்படும் என நம்புகிறோம். சஹாதரா, கரோல் பக்கில் தலா 4 பயிற்சி மையங்களுக்கும், நஜாப்கரில் 2 பயிற்சி மையங்களின் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.