ஆடை உற்பத்தி நுணுக்கங்கள் பயிற்சி வகுப்பு துவங்கியது
ஆடை உற்பத்தி நுணுக்கங்கள் பயிற்சி வகுப்பு துவங்கியது
UPDATED : ஜூன் 03, 2025 12:00 AM
ADDED : ஜூன் 03, 2025 09:57 AM
திருப்பூர் :
திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி வளாகத்திலுள்ள பயிற்சி மையத்தில், அப்பேரல் மெர்ச்சன்டைசிங் மற்றும் குவாலிட்டி கன்ட்ரோலர் ஆறாவது பிரிவு பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.
பயிற்சியை துவக்கிவைத்து, ஒருங்கிணைப்பாளர் மணியன் பேசியதாவது:
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களின் தொழிலாளர் தேவை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. பின்னலாடை உற்பத்தி துறையின், திறன்மிகு தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்யும்வகையிலேயே, நிப்ட்-டீ கல்லுாரி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து, பகுதி நேர பயிற்சி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை ஐந்து பயிற்சி வகுப்புகள் முடிவடைந்துள்ளன; ஆறாவது பயிற்சி வகுப்புகள் தற்போது துவங்கியுள்ளன. இப்பயிற்சியில் இணைவதன்மூலம், மாணவர்கள், ஆடை உற்பத்தி நுணுக்கங்களை திறம்பட கற்றுக்கொண்டு, துவக்கத்திலேயே சிறந்த சம்பளத்தில், நிரந்தரமான வேலையில் பணி அமர முடிகிறது. அதேபோல், தொழில்முனைவோரும், ஆடை உற்பத்தி தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, ஆர்டர்களை திறம்பட கையாளலாம்.
அப்பேரல் மெர்ச்சன்டைசிங், குவாலிட்டி கன்ட்ரோலர் பயிற்சியில், 12 பேர் இணைந்துள்ளனர். வரும் 8ம் தேதி வரை, அட்மிஷன் நடைபெறுவதால், விருப்பமுள்ளோர், உடனடியாக பதிவு செய்யவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பயிற்சியில் இணைந்துள்ளவர்களுக்கு, நோட்டு மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. பகுதி நேர பயிற்சியில் சேர விருப்பமுள்ளோர், 78451 84962, 95979 14182 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.