UPDATED : பிப் 13, 2026 12:43 PM
ADDED : பிப் 13, 2026 12:46 PM

நெய்வேலி:
என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் ஆய்வகங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்படுள்ளது.
என்.எல்.சி., இந்தியா நிறுவனம், தனது பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆய்வகங்களுக்கான என்.ஏ.பி.எல்., எனும் தேசிய அங்கீகாரத்தை, ஐ.எஸ்.ஓ., ஐ.இ.சி., தர நிலைகளின்படி பெற்றுள்ளது. அங்கீகார சான்றிதழை, என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் முதன்மைப் பொது மேலாளர் நீரஜ்குமாரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது, என்.எல்.சி., திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா உடனிருந்தார். இந்த புதுப்பிக்கப்பட்ட அங்கீகாரம், இந்தாண்டு கடந்த ஜன., 23ம் தேதி துவங்கி, வரும், 2030ம் ஆண்டு ஜன., 22 ம் தேதி வரை நான்கு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
இது, இயந்திரவியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய துறைகளில், 115 சோதனை அளவீடுகளை உள்ளடக்கியுள்ளது. என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின், பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உள்ள முதன்மை ஆய்வகங்கள் அனைத்தையும் இந்த என்.ஏ.பி.எல்., அங்கீகாரம் முழுமையாக உள்ளடக்கியுள்ளது.
குறிப்பாக காற்றின் தரம், நீர் மற்றும் கழிவுநீரின் தரம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் சோதனைக்கான பிரத்யேக வசதிகள் ஆகியவை அடங்கும்.
மேலும், பொதுவான பகுப்பாய்வு சோதனைகள், களிமண் மற்றும் வண்ணப்பூச்சுகள் சோதனை, மண் பரிசோதனை மற்றும் நுண்ணுயிரியல் ஆகிய பிரிவுகளுக்கும் இந்தச் சான்றிதழ் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், “புதுப்பிக்கப்பட்ட இந்த சர்வதேச அங்கீகாரம், நம்பகமான உள்நாட்டு சோதனை மற்றும் ஆராய்ச்சி சிறப்பின் மூலம் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சுரங்கம், அனல் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயல்பாடுகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது. இது நிறுவனத்தின் சுற்றுச்சூழல் இணக்கம், பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மற்றும் பல்வேறு திட்டங்களின் செயல்பாட்டுத் திறனை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த பெரிதும் உதவுகிறது,” என்றார்.

