UPDATED : ஜன 05, 2026 05:06 PM
ADDED : ஜன 05, 2026 05:07 PM
ஊத்துக்கோட்டை:
அரசு மேல்நிலை பள்ளியில், சேதம் அடைந்த வகுப்பறை கட்டடம், கூரையில்லாத கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால் மாணவ-மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இங்கு, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, வகுப்பறைகள் இல்லை. தற்போது இருக்கும் வகுப்பறைகளின் தரையும் சேதம் அடைந்து உள்ளது.
மேலும் குடிநீர் குடிக்கும் இடம் சேதம் அடைந்து உள்ளது. அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டு ஏற்பட்டு, கொசுக்கள் உருவாகி, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கழிப்பறைகளுக்கு கூரை இல்லாததால், மாணவ- மாணவியர் அவதிப்படுகின்றனர். இங்குள்ள 9 வகுப்பறைகள் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
அதில் மின் ஒயர்கள் வெளியே தெரியும் நிலையில் ஆபத்தாக உள்ளது. வகுப்பறைகள் மேல் தளங்களில் புற்கள் வளர்ந்துள்ளதால், அதன் உறுதித்தன்மை பாதித்து மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, மாவட்ட கல்வித்துறை உயரதிகாரிகள் பெரியபாளையம் அரசு பள்ளியில் ஆய்வு செய்து, மாணவ- மாணவியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பெற்றோர், கோரிக்கை விடுத்துள்ளனர்.

