UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM
ADDED : ஜூலை 15, 2024 08:54 AM
திருத்தணி: திருத்தணி நகராட்சி முருகப்ப நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் படித்து வருகின்றனர்.
மாலை 4:20 மணிக்கு, வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு சென்றனர். சிறிது நேரத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அமரும் பள்ளி கட்டடத்தின் சீலிங் இருந்து சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது.
இதில் வகுப்பறையில் இருந்த நாற்காலி சேதம் அடைந்தது. மாணவர்கள் வீட்டிற்கு சென்ற பின் நடந்த சம்பவத்தால், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. தரமற்ற கட்டுமான பணியே காரணம் என, பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
சம்பவ இடத்திற்கு, திருத்தணி வட்டார கல்வி அலுவலர் சலபதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கல்வி அலுவலர் பரிந்துரை செய்தார்.