UPDATED : ஏப் 27, 2026 06:39 PM
ADDED : ஏப் 27, 2026 06:40 PM
மேட்டுப்பாளையம்:
ஜே.இ.இ., முதன்மை தேர்வில், காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவி தேர்வாகி உள்ளார்.
இந்த கல்வி ஆண்டிற்கான, (2026-2027) மத்திய அரசின் ஜே.இ.இ., முதன்மை தேர்வு, ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு அமர்வுகளாக நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், அடுத்த கட்டமாக, ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வு எழுத நாடு முழுவதும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வாகி உள்ளனர்.
இந்த ஜே.இ.இ., தேர்வில், காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 12ம் வகுப்பு மாணவி பிரதீபா 82 சதவீதம் பெற்று, அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார். இத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் பட்சத்தில், இந்தியாவில் உள்ள உயர்ந்த பொறியியல் கல்லூரிகளான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில், சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
இத்தேர்வில் வெற்றி பெற்ற இம்மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமதாஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
