UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:11 AM
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து மையங்களில் நடந்த நீட் மாதிரி தேர்வை, 161 மாணவ, மாணவியர் எழுதினர்.
அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவ படிப்பு படிக்க, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்துகிறது.
இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, மே 4ல் நடக்கிறது. மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 395 மாணவ, மாணவியர் நீட் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஏப்., 1 முதல், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், என்.சி.பி., பல்லடம் அரசு பெண்கள், உடுமலை ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து மையங்களில், பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு நீட் மாதிரி தேர்வு ஐந்து மையங்களில் நேற்று நடத்தப்பட்டது; ஓ.எம்.ஆர்., வகையில் விடைத்தாள் வடிவமைக்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுதும், 161 மாணவ, மாணவியர் நீட் மாதிரி தேர்வெழுதினர்.
ஏப்ரலில் துவங்கிய பயிற்சி, மே 2ம் தேதி வரை நடக்கிறது. ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் தங்களுக்கு அருகில் உள்ள நீட் பயிற்சி மையத்தில், இணைந்து பயன் பெற்றுக்கொள்ளலாம்; மாதிரி தேர்வுகளில் பங்கேற்கலாம், என மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறினார்.