UPDATED : ஜூலை 23, 2025 12:00 AM
ADDED : ஜூலை 23, 2025 09:06 AM

கோவை:
அரசு பள்ளி ஆசிரியர்களில் பலருக்கு, பாடம் எடுக்கும் அளவுக்கு தகுதி இல்லை என தனியார் கல்வியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், குளோபல் எஜுகேஷனல் ட்ரஸ்ட் இந்தியா பி.லிட்., என்ற ஆய்வு நிறுவனம், அரசு பள்ளி ஆசிரியர்களில், பலர் தகுதி இல்லாதவர்களாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது குறித்து, கோவை மாவட்டக் கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
பல குழுக்களாக பிரிந்து, கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில், கோவை மாவட்டத்தில் உள்ள, பல அரசு பள்ளிகளில், ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி நேரத்துக்கு பிறகு, பல்வேறு கேள்விகளின் வாயிலாக ஆய்வு செய்ததில், ஆங்கில பாடம் நடத்தும் பல ஆசிரியர்களுக்கு, பேசவோ, கற்பிக்கவோ போதுமான அடிப்படை ஆங்கிலமே தெரியவில்லை. மற்ற பாட ஆசிரியர்கள், பாடக்குறிப்புகள் ஏதும் தயார் செய்வதில்லை. பள்ளியை கண்காணிக்க வேண்டிய, தலைமை ஆசிரியர்கள், வேலை நேரத்தில், அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தனர். ஆய்வுக்கு சென்றவர்களுக்கு உரிய மரியாதை தரவில்லை. இது குறித்த ஆதாரங்கள் உள்ளன. உங்கள் சோதனைக்கு, அவற்றை அனுப்ப தயாராக உள்ளோம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள, அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும், கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விபரம்:
தனியார் கல்வி ஆய்வு நிறுவனம் சார்பில், நம் பள்ளி ஆசிரியர்கள் குறித்து புகார் வருவது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற தனிநபர் புகார்களுக்கு இடம் அளிக்காமல், பள்ளிப்பணியுடன் வெளி நபர்கள் வருகையின்போது, தகுந்தவாறு செயல்பட, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.