அரசியல் கட்சியோடு தொடர்பா? நல்லாசிரியர் விருது கிடையாது! பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
அரசியல் கட்சியோடு தொடர்பா? நல்லாசிரியர் விருது கிடையாது! பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
UPDATED : ஜூலை 23, 2025 12:00 AM
ADDED : ஜூலை 23, 2025 11:36 AM
சென்னை:
அரசியலில் பங்கு, கட்சிகளுடன் தொடர்பில் உள்ள ஆசிரியர்களை, நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், செப்., 5 ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, மாநில அளவில் நல்லாசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு 10,000 ரூபாய் ரொக்கம், 2,500 ரூபாய் மதிப்பில் வெள்ளி பதக்கம், பாராட்டு சான்றுடன் நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டு அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி களில் 171 ஆசிரியர்கள், உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 171 ஆசிரியர்கள், மாவட்டத்திற்கு ஒரு மெட்ரிக் பள்ளி ஆசிரியர் வீதம் 38 பேர், ஆங்கிலோ இந்திய பள்ளி ஆசிரியர்கள் இரண்டு, சமூக பாதுகாப்பு துறை பள்ளி ஆசிரியர்கள் இரண்டு, மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இரண்டு பேர் வீதம், மாநில அளவில், 386 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
மாநில அளவில் தேர்வுக்குழு தலைவராக பள்ளிக்கல்வி இயக்குநரை நியமித்து, அவரின் கீழ் 10 உறுப்பினர்கள் பணியாற்றுவர். மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலரை தலைவராக கொண்டு, ஐந்து உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இந்த விருதிற்கு நடப்பாண்டு, செப்., 30 வரை பணி நிறைவு பெற உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்யக்கூடாது.
தேர்வாகும் ஆசிரியர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டும், ஒழுங்கு நடவடிக்கையும் இருக்கக்கூடாது. அரசியலில் பங்கு, கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்களை கண்டிப்பாக பரிந்துரை செய்யக்கூடாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

