UPDATED : ஜூலை 24, 2025 12:00 AM
ADDED : ஜூலை 24, 2025 08:13 AM

ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 4 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் ஒரு மாணவர் கூட புதிதாக சேரவில்லை.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டாரத்தில் மொத்தம் 121 அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த மொத்த பள்ளிகளிலும் 2025 - 26ம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் இதுவரை 705 மாணவர்களே சேர்ந்துள்ளனர். அதிலும் உள்ளியம்பாக்கம், கொளத்தூர், புது கேசாவரம் மற்றும் கிழவனம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் ஒரு மாணவர் கூட புதிதாக சேரவில்லை என கூறப்படுகிறது. உள்ளியம்பாக்கம், கார்ப்பந்தாங்கள், புளியமங்கலம் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பள்ளியான சி.எஸ்.ஐ நம்மனேரி தொடக்க பள்ளிகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில் இதுவரை சேர்க்கை நடைபெறாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும்படி வட்டார கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனால் சேர்க்கை நடைபெறாத மற்றும் ஒற்றை இலக்க மாணவர்கள் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்டு வட்டார கல்வி அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தி புதிய சேர்க்கை நடப்பதை துரிதப்படுத்தவும், ஒற்றை இலக்கத்தில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையை ஈரிலக்கத்தில் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் அரசு வரி பணம் விரயமாவதை தடுக்க வேண்டுமென கல்வியாளர்களும், சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.