UPDATED : ஜன 11, 2026 09:53 PM
ADDED : ஜன 11, 2026 09:55 PM
சென்னை:
அரசு துறைகளின் சேவைகளை, எளிமையாக 'வாட்ஸாப்' செயலி வாயிலாக பெற, 'நம்ம அரசு' என்ற பெயரில், 'சாட்பாட்' வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.
உமாஜின் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு உட்பட, பல்வேறு துறைகளில், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாட்டின் நிறைவு விழாவில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றார்.
இம்மாநாட்டில் அரசு துறைகளின் சேவைகளை, 'வாட்ஸாப்' வாயிலாக பெற, 'நம்ம அரசு சாட்பாட்' எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சேவைகளை, 78452 52525 என்ற ' வாட்ஸாப்' எண்ணில் பெற முடியும். இந்த எண்ணிற்குரிய வாட்ஸாப்பில், ஏதேனும் ஒரு துறையை தேர்வு செய்ய வேண்டும். அதில், சேவைகள் என குறிப்பிட்டிருக்கும்.
அதில் நமக்கு தேவையான சேவையை தேர்வு செய்து பயன்படுத்தலாம். தற்போது, 16 அரசு துறைகளைச் சேர்ந்த 51 சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. மின்சார கட்டணம் செலுத்தும் வசதி, மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் சேவை உட்பட பல்வேறு சேவைகளை பெறலாம்.

