ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்லுாரி கட்டணத்தை அரசு செலுத்தும்
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்லுாரி கட்டணத்தை அரசு செலுத்தும்
UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM
ADDED : ஜூலை 13, 2024 09:48 AM
புதுச்சேரி:
புதுச்சேரி ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்லுாரி கட்டணத்தை அரசே முழுமையாக செலுத்தும் என, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், சென்டாக் கன்வீனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்டாக் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களில் நீட் அல்லாத பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது.
இதில், சென்டாக் மூலம் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேர்க்கை பெற்ற புதுச்சேரி மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களை கல்லுாரி நிர்வாகம் சேர்க்கையின் போது, கட்டணம் செலுத்த வேண்டும் என, வலியுறுத்துவதாக புகார்கள் வந்துள்ளது.
எனவே, புதுச்சேரி மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் கட்டணம் முழுவதையும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அரசே செலுத்தும் என சென்டாக் மூலமாகவே மாணவர்களுக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும்.
மேலும், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளை சேர்ந்த பூர்வீக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களிடம் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் எந்தவித கட்டணத்தையும் செலுத்த கட்டாயப்படுத்த கூடாது என, அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.