பென்ஷன் திட்டத்தில் கவர்னர், முதல்வர் தலையிட கோரிக்கை
பென்ஷன் திட்டத்தில் கவர்னர், முதல்வர் தலையிட கோரிக்கை
UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM
ADDED : ஜூலை 13, 2024 09:49 AM
புதுச்சேரி:
அரசு உதவி பெறும் பள்ளி பென்ஷன் திட்டத்தில் கவர்னர், முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்என, புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பு செயலாளர் மார்டின் கென்னடி அறிக்கை:
புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஊழியர்களுக்கு 95 சதவீதம் புதுச்சேரி அரசும், மீதி 5 சதவீதம் பென்ஷன் அரசு நிதி உதவி பெறும் பள்ளி நிர்வாகங்கள் தர வேண்டும் என்பது சட்டம்.
ஆனால் ஒரு பள்ளி நிர்வாகம் மட்டும் இதுவரை 5 சதவீத பென்ஷன் பணத்தை கட்ட மறுத்து வருகிறது. இதன் காரணமாக அப்பள்ளி பென்ஷனர்கள் கடந்த 10 மாதமாக பென்ஷன் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் 7 மாதங்களாக ஊதியம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
அப்பள்ளிக்கு புதுச்சேரி அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி அனைத்தும் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பப்படுகிறது. பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து பலஆயிரம் மாணவர்கள் வாழ்க்கையில் உயர பாடுபட்ட ஆசிரியர்கள் இன்று வயதான காலத்தில் மருத்துவ செலவு கூட செய்ய முடியாமல் துன்புறுவதை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்விஷயத்தில் கவர்னர், முதல்வர், கல்வி அமைச்சர் பள்ளி துறை இயக்குனர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.