UPDATED : செப் 08, 2024 12:00 AM
ADDED : செப் 08, 2024 10:25 PM
சென்னை:
கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகள் எதையும் பள்ளிகளில் நடத்தக் கூடாது என, தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னை பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியை, அவருக்கு சிபாரிசு செய்த மற்றொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, தன்னம்பிக்கை அளிக்கும் நோக்கத்தில் 'பள்ளி மேலாண்மை குழு சொற்பொழிவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. 'பரம்பொருள் அறக்கட்டளை என்ற அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் உரை நிகழ்த்தினார்.
முற்பிறவி, பாவ புண்ணியம் போன்ற விஷயங்கள் குறித்து அவர் பேசினார். சில பெண்கள் அழகில்லாமல் பிறக்க காரணம், முந்தைய பிறவியில் அவர்கள் செய்த பாவங்களே என்றார். மாணவிகள் அவரது பேச்சில் மூழ்கியிருந்த நிலையில், ஒரு ஆசிரியர் எழுந்து, தன்னம்பிக்கை உரையில் பாவ புண்ணியம் குறித்து பேச என்ன அவசியம் என்று கேட்டார்.
கேட்ட ஆசிரியர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. போன ஜென்மத்தில் இப்படியெல்லாம் குதர்க்கமாக பேசிய பாவம் தான், இந்த பிறவியில் உங்களுக்கு பார்வை இல்லாமல் போய்விட்டது என பேச்சாளர் தடாலடியாக பதிலளித்தார்.
அதை சில ஆசிரியர்கள் ஆட்சேபித்தனர். அவர்களுடன் கோபத்துடன் வாதிட்டார் பேச்சாளர். இந்த விவகாரம் வீடியோவில் பதிவாகி வேகமாக பரவியது. ஆசிரியர்கள், ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் சூடாக கருத்து தெரிவித்தனர். பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் ஆவேசமாக கருத்து வெளியிட்டார்.
அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களுக்கு ஆசிரியர்கள் எதிர்வினை ஆற்றாவிட்டால், மாணவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் வாய்ப்புள்ளது. பள்ளியில் யார் பேச வேண்டும்; பேசக்கூடாது என்பதை, ஆசிரியர்கள் தங்கள் அறிவை பயன்படுத்தி முடிவெடுக்க வேண்டும் என அதே பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
ஒவ்வாத நிகழ்ச்சி நடந்தது வேதனை அளிக்கிறது. மகாவிஷ்ணு என்பவர், எங்கள் பள்ளிக்கு வந்து, எங்கள் ஆசிரியரை அவமதிப்பதை ஏற்க முடியாது. அவரையும், அவரை பள்ளியில் பேச வைத்தவர்களையும் சும்மா விட மாட்டோம் என்றார்.
அமைச்சரின் உத்தரவுப்படி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம், பென்னலுார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கும்; சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பேச்சாளர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் அசோக் நகர் பள்ளி எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தினர். மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதித்ததற்காக, வன்கொடுமை சட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சைதாப்பேட்டை போலீசில், பார்வையற்ற தமிழாசிரியர் சங்கத்தினர், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் பின்னணியை ஆராய பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர் பஞ்சாபகேசன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அசோக் நகர் பள்ளியில் விசாரணை நடத்தினர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் உள்ளது பரம்பொருள் அறக்கட்டளையின் தலைமை அலுவலகம். அதில், அவிநாசி போலீசார் மற்றும் உளவுத்துறையினர் விசாரித்தனர்.
இந்நிலையில், பள்ளிகளில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ, தனியார் அமைப்புகளோ ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என, தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.
அறிவியல் வழிதான் முன்னேற்றத்திற்கானது!
மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அறிவியல் சிந்தனைகள், தரம் மிகுந்த நம் பாடநுால்களில் இடம்பெற்றுள்ளன. எதிர்கால சவால்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள சிறப்பான கருத்துக்களை, ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும்.
அதற்கு தேவையான புத்தாக்க பயிற்சியை, சமூக கல்வியை, துறைசார்ந்த வல்லுனர்கள், அறிஞர்களை கொண்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டிற்கான சீரிய கருத்துக்கள்தான், மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். அறிவியல் வழியே முன்னேற்றத்திற்கான வழி.
அமைச்சருடன் நெருக்கம்?
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு, அமைச்சர்கள் மகேஷ், சுப்ரமணியன், மனோ தங்கராஜ் உள்ளிட்ட அமைச்சர்களுடன் நெருக்கமானவர் எனவும், அதை வைத்துதான் பள்ளிகளில் ஆன்மிக உரை நிகழ்ச்சி அனுமதி பெற்றார் எனவும், கூறப்படுகிறது.
அமைச்சர் மகேஷ் கூறுகையில், நான் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன். அங்கு, என்னுடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதுபோல், வள்ளலார் குறித்த புத்தகத்தை வழங்கி, அதுகுறித்து பேச வேண்டும் என்று கேட்டார். வள்ளலார் கெட்டவரில்லை என்பதால், அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அதற்கும், இதற்கும் தொடர்பில்லை, என்றார்.