UPDATED : செப் 08, 2024 12:00 AM
ADDED : செப் 08, 2024 10:23 PM
சிங்கப்பூர்:
திருவள்ளுவர் பெயரிலான, உலகளாவிய முதல் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைகிறது. இதைத் தவிர இந்தியாவில் முதலீடு செய்வதற்காக அலுவலகமும் அங்கு திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி ஆசிய நாடான புருனேவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து மற்றொரு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தார். இது, பிரதமராக அவருடைய ஐந்தாவது பயணம். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அவரை வரவேற்று, தனிப்பட்ட முறையில் விருந்தும் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, திருவள்ளுவர் பெயரில், முதல் சர்வதேச கலாசார மையம் சிங்கப்பூரில் துவக்கப்பட உள்ளது என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நல்லுறவு
அப்போது மோடி கூறியதாவது:
இந்தியாவின் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் விரைவில் துவக்கப்படும் என்பதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மிகவும் பழமையான மொழியான தமிழில் அவர் எழுதிய திருக்குறள், உலகுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. அவர், 2,000ம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய திருக்குறள், தற்போதைக்கும் பொருத்தமாக உள்ளது.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபாராட்டும் உலகு என திருவள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, நீதியையும் நன்மையையும் விரும்பி, பிறருக்குப் பயன்பட வாழ்வோரின் நல்ல பண்பை உலகம் போற்றி கொண்டாடும். இந்த திருக்குறளின் அடிப்படையில் சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்துபவர்களாக விளங்குவர் என்று நம்புகிறேன்.
குட்டித்தீவு நாடான சிங்கப்பூரின் நான்கு அரசு அலுவல் மொழிகளில் ஆங்கிலம், மலாய், மான்ட்ரின் உடன் தமிழும் இடம்பெற்றுள்ளது. அந்த நாட்டின் மக்கள் தொகையில், 9 சதவீதம் பேர் இந்தியர்கள். தமிழ் பேசுவோர், 2.5 சதவீதமாக உள்ளனர்.
திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு உள்ள பிரதமர் மோடி, பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு அரங்குகளில், அவற்றை தொடர்ந்து குறிப்பிட்டு வந்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா வந்திருந்த மலேஷிய பிரதமருடன் நடந்த சந்திப்பின்போது, அந்த நாட்டில் திருவள்ளுவர் பெயரில் இருக்கை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், திருவள்ளுவர் பெயரில் சர்வதேச கலாசார மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
முதல் மையம், சிங்கப்பூரில் அமைய உள்ளது. இதை மிக விரைவில் அமைக்க உள்ளதாக, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதலீடு
சிங்கப்பூர் பிரதமருடன் சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இருதரப்பு உறவுகளை, விரிவான பல்துறை கூட்டாளியாக உயர்த்தும் வகையில் பல துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே, இந்தியா -சிங்கப்பூர் அமைச்சர்கள் அளவிலான இரண்டாவது வட்டமேஜை மாநாடு சிங்கப்பூரில் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் அடையாளம் காணப்பட்ட மேம்பட்ட உற்பத்தி, போக்குவரத்து, டிஜிட்டல் மயமாக்கல், சுகாதாரம் மற்றும் மருத்துவம், திறன் மேம்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாகவும், இரு பிரதமர்களும் விவாதித்தனர்.
சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடனும், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து, இந்தியாவில் முதலீடு செய்யும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, அங்கு தனி அலுவலகம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர, செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு வரும்படி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பின்போது, சிங்கப்பூர் எங்களுடைய நட்பு நாடு மட்டுமல்ல. அது ஒவ்வொரு வளரும் நாடுகளுக்கும் ஊக்கசக்தியாக விளங்குகிறது. அதன் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சி, அபரிமிதமானது. இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம். அமைச்சர்கள் அளவிலான வட்டமேஜை மாநாடு, அதற்கான துவக்கம், என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தையும் பிரதமர் மோடி சந்தித்து, இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.
முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
சிங்கப்பூரைச் சேர்ந்த பல துறை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வளர்ச்சியின் பாதையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. உலகின் மிகவேகமான பொருளாதாரமாக உள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரும் பொருளாதாரமாக இந்தியா மாற உள்ளது.இந்தியாவில் முதலீடுகள் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உள்கட்டமைப்பு, எரிசக்தி, விமான போக்குவரத்து, பழைய பொருட்களை மறுசுழற்சி செய்வது என, ஒவ்வொரு துறையிலும் முதலீட்டு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவற்றை முதலீட்டாளர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.