UPDATED : ஜூலை 29, 2024 12:00 AM
ADDED : ஜூலை 29, 2024 11:53 PM
சிக்கமகளூர்:
ஒரு காலத்தில் அரசு பள்ளிகள் என்றால் முகத்தை சுளிக்கும் சூழ்நிலை இருந்தது. பெற்றோர், தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே, பெரிதும் ஆர்வம் காண்பித்தனர். ஏனென்றால் அரசு பள்ளிகளில் கல்வி தரமாக இருக்காது; அடிப்படை வசதிகள் இருக்காது; ஆசிரியர்கள் அலட்சியம் காண்பிப்பர் என, பெற்றோர் கருதினர். இதனால், கடனாளி ஆனாலும் கூட, தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்தனர்.
முன்னுதாரணம்
இதற்கு விதிவிலக்காக, சில அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் சிக்கமகளூரின் பள்ளி ஒன்று, மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. மாணவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்று தருகிறது. குறிப்பாக சிறு வயதில் இருந்தே, சேமிப்பு பழக்கத்தை கற்று தருகிறது.
சிக்கமகளூரில், கூதுவள்ளி அரசு தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 30 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு சிறு வயதிலேயே, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில், பள்ளியில் பேங்கிங் வசதியை செய்துள்ளது.
மாணவர்களுக்காக பள்ளியில் வங்கி துவங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாணவர்களுக்கும், சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாஸ்புக், வங்கி கணக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ட்ரூ ஸ்கூல் பேங்க்
இதுவரை 3,000 ரூபாய் டிபாசிட் வசூலாகியுள்ளது. யாராவது பணம் கட்டினால் பாஸ்புக்கில் பதிவு செய்யப்படுகிறது. வங்கிக்கு 'ட்ரூ ஸ்கூல் பேங்க்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. தினமும் காலை 9:00 மணி முதல் வங்கியில் பணம் டிபாசிட் செய்யலாம்.
வங்கி மேனேஜர், கேஷியர் என, யாரையும் பள்ளி நிர்வாகம் நியமிக்கவில்லை. தற்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஷிரவண், மேனேஜராகவும், துருவன் கேஷியராகவும் செயல்படுகின்றனர்.
அனைத்து மாணவர்களின் கணக்கிலும், தலா 150 முதல் 300 ரூபாய் வரை டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த தொகை மேலும் அதிகரிக்கும் என, பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளியின் புதிய முயற்சிக்கு பாராட்டு குவிந்துள்ளது. மாணவர்களிடம் சிறு வயதில் இருந்தே, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் தங்களுக்கு பெற்றோர் தரும் பாக்கெட் மணியை, வீணாக செலவு செய்யாமல், பள்ளியில் தங்களுக்காக திறக்கப்பட்ட வங்கியில் சேமிக்கின்றனர்.
வருங்காலத்தில், பேங்கிங் பணிகளை மேற்கொள்ளவும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைந்துள்ளது. வங்கி வெற்றிகரமாக செயல்படுகிறது. மற்றொரு புதுமையையும், கூதுவள்ளி அரசு தொடக்க பள்ளி செய்துள்ளது. பள்ளியில் 'ட்ரூ ஷாப்' என்ற பெயரில், கடை திறந்துள்ளனர்.
குறைந்த விலை
இந்த கடையில் மாணவர்கள் பயன்படுத்தும் பேனா, பென்சில், புத்தகம், ரப்பர், ஷார்ப்னர் உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும். இவைகள் தனித்தனி டப்பாவில் வைக்கப்பட்டுள்ளன. குறைந்த விலையில் மாணவர்கள் வாங்கலாம்.
கடையை நிர்வகிக்க யாரும் கிடையாது. பொருட்கள் தேவைப்படும் மாணவர்கள், அந்தந்த டப்பாவில் பொருட்களை எடுத்து கொண்டு, அதற்கான பணத்தை அங்குள்ள டப்பாவில் போட வேண்டும்.
பொருட்கள் வைத்துள்ள டப்பாவின் மீதே, விலை எழுதப்பட்டுள்ளது. ஒருவேளை பொருட்களுக்கான பணம் குறைவாக இருந்தால், மறுநாள் போடவும் அனுமதி உண்டு.
மாணவர்களை யாரும் கண்காணிப்பது இல்லை. பொருட்களும் திருட்டு போவதில்லை. அரசு பள்ளியின் புதுமையான நடவடிக்கை, மற்ற பள்ளிகளுக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது