பாரதியார் பல்கலை விடுதிகளில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்: பதிவாளர் அறிவிப்பு
பாரதியார் பல்கலை விடுதிகளில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்: பதிவாளர் அறிவிப்பு
UPDATED : அக் 16, 2024 12:00 AM
ADDED : அக் 16, 2024 09:39 AM

கோவை :
விடுதிகளில் உள்ள குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என பாரதியார் பல்கலை பதிவாளர்(பொறுப்பு) ரூபா தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலையின், 39வது பட்டமளிப்பு விழா பல்கலையில், நேற்று முன்தினம் நடந்தது. தமிழக கவர்னர் ரவி பட்டங்களை வழங்கினார். அப்போது பி.எச்டி., பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர், கவர்னர் ரவியிடம் மனு ஒன்றை அளித்தார்.
மனுவில், பாரதியார் பல்கலையில் பி.எச்டி., மாணவர்கள் வழிகாட்டிகளால் அடையும் துன்பங்கள் குறித்தும், மாணவ விடுதியின் அவல நிலை குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும், மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பல்கலை மாணவர் விடுதியில் ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சோதித்தார். மாணவர்களுக்கு தேவையான உரிய வசதிகளை செய்து தர, பல்கலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், விடுதிகளில் உள்ள குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என, பல்கலை பதிவாளர்(பொறுப்பு) ரூபா தெரிவித்துள்ளார்.