UPDATED : அக் 31, 2026 02:19 PM
ADDED : அக் 31, 2026 02:20 PM
ராசிபுரம்:
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் - 2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு, நாளை, 1 அன்று காலை, 9:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை நடக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலுார், திருச்செங்கோடு ஆகிய வட்டாரங்களில் உள்ள, 50 தேர்வு மையங்களில், 14,199 தேர்வர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வு முறைகேடுகள் இன்றி நடைபெற துணை கலெக்டர் தலைமையில், 4 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் தங்களது தேர்வு மையங்களுக்கு எளிதாக சென்று வரும் வகையில், சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களில் தடையற்ற மின்வசதி, குடிநீர் வசதி, அவசர மருத்துவ உதவிகள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ராசிபுரம் வட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கான வினாத்தாள்கள் மற்றும் தேர்வு பொருட்கள், நேற்று இரவு ராசிபுரம்-சேலம் சாலையில் உள்ள சார்நிலை கருவூல அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.
பின், அவை கருவூல பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து கருவூல அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
