UPDATED : ஏப் 13, 2024 12:00 AM
ADDED : ஏப் 13, 2024 10:26 AM

உடுமலை :
மலைவாழ் குழந்தைகள், இடைநிற்றல் இல்லாமல் உயர்நிலைக்கல்வியை தொடர, ஒருங்கிணைந்த உயர்நிலை உண்டு உறைவிடப்பள்ளி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலைவாழ் பகுதியிலுள்ள குழந்தைகள் கல்வி பயில, அரசு உண்டு உறைவிட பள்ளிகளை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், அக்குழந்தைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உண்டு உறைவிடப்பள்ளிகள் மற்றும் அந்தந்த மலைகிராமங்களில் துவக்கப்பள்ளிகள் செயல்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், ஐந்து உண்டு உறைவிடப்பள்ளிகளில், ஒவ்வொரு பள்ளிகளிலும் ஐம்பது குழந்தைகளுக்கு அனுமதி உள்ளது.
தவிர, கற்றல் இடைநிற்றலை தவிர்க்க, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நடத்தும் சிறப்பு உண்டு உறைவிட பயிற்சி மையங்களும் உள்ளன.
உடுமலை, சுற்றுப்பகுதியில் ஐந்து உண்டு உறைவிடப்பள்ளிகள் உள்ளன. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, இருக்கிறது. உயர்நிலை கல்விக்கு அரசு பள்ளிகளில், கல்வியும், அரசு விடுதியில், உணவு மற்றும் தங்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
துவக்கநிலை வரை மட்டுமே, கட்டாய கல்வியாக இருப்பதால், விருப்பமுள்ள பெற்றோர் மட்டுமே, உயர்நிலை கல்விக்கு தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
ஒவ்வொரு உண்டுஉறைவிடப்பள்ளிகளிலும், பத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு முடிக்கின்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படுவது, அதில் ஒரு சதவீதமாக மட்டுமே உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை சுற்றுப்பகுதியில்தான் மலைவாழ் கிராமங்கள் அதிகம் உள்ளன. இங்குள்ள குழந்தைகளுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள, உயர்நிலை உண்டு உறைவிடப்பள்ளிகள் கட்டாயம் தேவையாக உள்ளது.
அரசு இவ்வசதியை ஏற்படுத்தினால், மலைவாழ் மக்களுக்கும், நம்பிக்கை உண்டாகும். துவக்க நிலையோடு, அக்குழந்தைகளின் கல்வி முடங்குவதால், கல்வி கற்றும் பயன்படுவதில்லை. மலைவாழ் குழந்தைகளின் கல்விக்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கல்வி ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.