UPDATED : ஏப் 13, 2024 12:00 AM
ADDED : ஏப் 13, 2024 10:23 AM

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கான தபால் ஓட்டு செலுத்தும் பணி, மூன்றாம் கட்ட பயிற்சியின் போது நடைபெற்றது.
அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள போலீசாருக்கு தபால் ஓட்டு செலுத்தும் பணி துவங்கியது. காஞ்சிபுரத்திலும், ஸ்ரீபெரும்புதுாரிலும் போலீசார் தபால் ஓட்டு செலுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் பணியாற்றும் போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் என, 814 பேர் தபால் ஓட்டளிக்கின்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், தபால் ஓட்டு செலுத்துவதற்கான பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
ஓட்டுச்சாவடிக்கான நிலை அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். வாக்காளர் பட்டியலில் போலீசின் பெயர் சரிபார்க்கப்பட்டு, விரலில் மை வைக்கப்பட்ட பின், அவர்களுக்கு தபால் ஓட்டு செலுத்துவதற்கான ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது.
இதையடுத்து, வேட்பாளரை தேர்வு செய்து, உறையில் மடித்து மூடி, ஒட்டிய பின், பெட்டியில் தபால் ஓட்டு செலுத்தினர்.
செங்கல்பட்டு
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறை அலுவலர்களுக்கு, தபால் ஓட்டுப்பதிவு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், தபால் ஓட்டு பதிவிற்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உட்பட்ட காவலர்களுக்கு, 12ம் தேதியும், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல் அலுவலர்களுக்கு, 13ம் தேதியும், தபால் ஓட்டு போடலாம்.
இந்த உதவி மையத்தில், தபால் ஓட்டு பதவின்போது, வாக்காளரால் சமர்ப்பிக்கப்பட வேண்டியபடிவம் 13ஏ முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சான்றொப்பமிடும் அலுவலர்களாக, மதுராந்தகம் தனி வட்டாட்சியர் ராஜேந்திரன், மாமல்லபுரம், புதுச்சேரி நெடுஞ்சாலை திட்ட தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் நியமித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலர்கள் தபால் ஓட்டு 631; தேர்தல் பணியின்போது, காவல் அலுவலர்கள் ஓட்டு 681; தாம்பரம் காவல் ஆணையரக காவல் அலுவலர்கள் தபால் ஓட்டுகள் 2,800 உள்ளன.