அவர் எங்க மாணவர்: இலங்கை பிரதமரை கொண்டாடும் டில்லி ஹிந்து கல்லூரி
அவர் எங்க மாணவர்: இலங்கை பிரதமரை கொண்டாடும் டில்லி ஹிந்து கல்லூரி
UPDATED : செப் 27, 2024 12:00 AM
ADDED : செப் 27, 2024 10:11 PM
புதுடில்லி:
இலங்கை பிரதமராக பதவியேற்று கொண்ட ஹரிணி அமரசூரிய, எங்களது கல்லூரியில் படித்தவர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம், என டில்லியில் உள்ள ஹிந்து கல்லூரி பெருமிதம் தெரிவித்து உள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் மூத்த தலைவர் தினேஷ் குணவர்தன, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். இதன் மூலம் இலங்கையின் 3வது பெண் பிரதமர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
பிரபல கல்வியாளரான ஹரிணி அமரசூரிய, டில்லி பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள ஹிந்து கல்லூரியில் 1991 முதல் 1994 வரை பிஏ சோஷியாலஜி முடித்தவர் ஆவார்.
பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்து தெரிவித்து ஹிந்து கல்லூரி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இலங்கையின் 16வது பிரதமராகவும், 3வது பெண் பிரதமராகவும் பதவியேற்று கொண்டதில் பெருமை கொள்கிறோம். ஹிந்து கல்லூரியின் வகுப்பறைகளில் இருந்து தனது இலங்கை பிரதமர் அலுவலகம் வரை டாக்டர் ஹரிணி மேற்கொண்ட பயணம் பெருமைக்குரிய விஷயம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
கல்லூரி முதல்வர் அஞ்சு ஸ்ரீவஸ்னைா கூறுகையில், ஹரிணியின் வெற்றி மற்றும் வளர்ச்சியை குறித்து நாங்கள் நம்ப முடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறோம். அவர் கல்லூரியில் படித்த காலம் தான், தலைவராக மாறுவதற்கான அவரது பாதையை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், என்றார்.