ஸ்கிரைப்களை தேடி கல்லுாரிகளுக்கு படையெடுக்கும் தலைமை ஆசிரியர்கள்
ஸ்கிரைப்களை தேடி கல்லுாரிகளுக்கு படையெடுக்கும் தலைமை ஆசிரியர்கள்
UPDATED : பிப் 16, 2026 10:49 PM
ADDED : பிப் 16, 2026 10:50 PM
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவும்படி, தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி மாணவர்களை கெஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், தேர்வு எழுத முடியாத வகையில் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டோர், தாங்கள் சொல்வதை எழுத, 'ஸ்கிரைப்' எனும் உதவியாளர்களை நியமித்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இது வரை ஆசிரியர்கள் 'ஸ்கிரைப்' ஆக தேர்வெழுதிய நிலையில், இந்த ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லுாரி மாணவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் போன்றோரை, 'ஸ்கிரைப்' ஆக நியமிக்க வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், உதவியாளராக தேர்வெழுத விண்ணப்பிக்காத நிலை உள்ளது.
இது குறித்து, அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், சமீபத்தில், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு அவர்கள், 'நீங்கள் தான், கல்லுாரிகளுக்கு சென்று மாணவர்களை தேர்வெழுத வரும்படி அழைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தலைமை ஆசிரியர்கள், கல்லுாரிகளுக்கு சென்று, 'ஸ்கிரைப்'களை தேடி வருகின்றனர்.
இது பற்றி, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'பெரும்பாலும் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள், 'ஸ்கிரைப்' ஆக உதவி செய்ய முன் வருகின்றனர்.
'ஆனால், அவர்களுக்கு, கணிதம், இயற்பியல், வேதியியலில் உள்ள சமன்பாடுகள், குறியீடுகள் குறித்து போதிய புரிதல் இல்லாத நிலை உள்ளது. இது, எங்களுக்கும் மாணவர்களுக்கும் நெருக்கடியாக மாறி உள்ளது' என்றனர்.

