தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுங்கள்; ஜெர்மனி தமிழர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுங்கள்; ஜெர்மனி தமிழர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
UPDATED : செப் 03, 2025 12:00 AM
ADDED : செப் 03, 2025 07:02 PM
சென்னை:
''ஜெர்மனியில் சிறியதாக தொழில் செய்தாலும், அந்த தொழிலை தமிழகத்திலும் துவங்க முயற்சிக்க வேண்டும். தமிழக கிராமங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு உங்களால் முடிந்த கல்வி உதவிகளை செய்யுங்கள்,'' என அந்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள கொலோன் நகரில் வாழும் தமிழர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சி அமைந்த பின், தமிழகம் எல்லா வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டிற்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
அரபு நாடுகள், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, ஏராளமான முதலீடுகளை தமிழகத்தை நோக்கி ஈர்த்து, மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறோம்.
மரபின் வேர்கள் வெளிநாட்டில், 'செட்டில்' ஆகிவிட்ட சிலருக்கு, மண்ணை விட்டு பிரிந்து, துாரதேசத்துக்கு வந்து விட்டோமோ, இனி இந்த சொந்தம் அவ்வளவு தானா என்று, உள்ளுக்குள் எண்ணம் ஏற்பட்டிருக்கும்.
அப்படிப்பட்ட புலம் பெயர்ந்த தமிழர்களுடையை குழந்தைகளை, மாணவர்களை, தமிழகத்திற்கு அழைத்து வந்து, நம் மரபின் வேர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த திட்டத்தின் கீழ், 15 நாடுகளில் இருந்து, 292 பேர் தமிழகம் வந்துள்ளனர். இதன் வாயிலாக, சில தலைமுறைகளாக விட்டுப்போன சொந்தங்களை தேடி கண்டுபிடித்து உ ள்ளனர். தமிழகம் வளர வேண்டும். அதற்கு உங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து உங்கள் தாய் மண்ணுக்கு நீங்கள் வழங்க வேண்டும்.
இங்கு சிறியதாக தொழில் செய்து கொண்டிருந்தாலும், அந்த தொழிலை தமிழகத்திலும் துவங்க முயற்சிக்க வேண்டும். பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், தமிழகத்தில் உள்ள வாய்ப்புகளை எடுத்துக்கூறி, அங்கு முதலீடு செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.
உதவி செய்யுங்க உங்கள் சொந்த கிராமங்களை கவனித்துக் கொள்ளுங்கள். அங்கு படிக்கிற, நம் அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஏழை எளிய மாணவர்களுக்கு முடிந்த கல்வி உதவிகளை செய்யுங்கள்.
தமிழ் மண்ணையும், மக்களையும் மறக்காதீர்கள். ஆண்டுக்கு ஒரு முறையாவது தமிழகத்திற்கு குழந்தைகளுடன் வர வேண்டும்; தமிழகத்தின் வளர்ச்சியை, மாற்றத்தை பார்க்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.