156 நடுநிலை பள்ளிகளில் ஹைடெக் லேப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தகவல்
156 நடுநிலை பள்ளிகளில் ஹைடெக் லேப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தகவல்
UPDATED : ஆக 06, 2025 12:00 AM
ADDED : ஆக 06, 2025 08:58 AM

ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டத்தில், 156 நடுநிலை பள்ளிகளில் உயர் தெழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான அடைவு ஆய்வு குறித்த மீளாய்வு கூட்டம் ராசிபுரம் அடுத்த தனியார் கல்லுாரியில் நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தலைமை வகித்தார். கலெக்டர் துர்கா மூர்த்தி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, அமைச்சர் மகேஷ் கூறியதாவது:
மாநில அளவிலான அடைவு ஆய்வில், 18-வது மாவட்டமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களின் தரவரிசை, மாணவர்கள் பின்தங்கிய திறனடைவு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியர்களிடம் மீளாய்வு செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், 574 தொடக்க பள்ளிகளில், 611 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே உயர்தொழில் நுட்ப ஆய்வகம் இருந்த நிலையில், தற்போது, 156 நடுநிலை பள்ளிகளுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இத்திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் செய்தல் வேண்டும். தமிழகத்தில், ஊராட்சி ஒன்றியம் வாரியாக, 500 அரசு மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும். இதன் மூலம் அதிகப்படியான அரசு பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெற முடியும். உடற்கல்விக்கு என்று பிரத்யேக பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், 271 தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வு நடத்தப்பட்டது. சி.இ.ஓ., மகேஸ்வரி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், மாவட்ட கல்வி அலுவலர்கள் பச்சமுத்து, புருஷோத்தமன், உதவி திட்ட அலுவலர் அருள்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.