தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., கவுன்சிலிங்கில் கல்லுாரிகள், பாடப்பிரிவு தேர்வில் அதிக கவனம் தேவை: வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் விளக்கம்

இன்ஜி., கவுன்சிலிங்கில் கல்லுாரிகள், பாடப்பிரிவு தேர்வில் அதிக கவனம் தேவை: வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் விளக்கம்

இன்ஜி., கவுன்சிலிங்கில் கல்லுாரிகள், பாடப்பிரிவு தேர்வில் அதிக கவனம் தேவை: வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் விளக்கம்


UPDATED : ஜூன் 28, 2026 12:21 PM

ADDED : ஜூன் 28, 2026 12:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2026 12:21 PM ADDED : ஜூன் 28, 2026 12:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
'இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கல்லுாரிகள், பாடப்பிரிவு தேர்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,' என வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினர்.

அண்ணா பல்கலையின் கீழ் உள்ள அரசு, உதவி பெறும், தனியார் இன்ஜி., கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீடு பி.இ., பி.டெக்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஆண்டுதோறும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்பதை விளக்கும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி தினமலர் நாளிதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கியது.

நேற்று காலை தேனி அன்னப்பராஜா மஹாலிலும், மதியம் திண்டுக்கலில் உள்ள பி.வி.கே., ஓட்டலில் நடந்தது. இந்நிகழ்ச்சியை ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் டாக்டர் மகேஸ்வரி, கற்பகம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லுாரி இயக்குநர் டாக்டர் பாலாஜி, தமிழ்நாடு இன்ஜினியரிங் அட்மிஷன் முன்னாள் இயக்குநர் டாக்டர் நாகராஜன், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

கல்லுாரிகள், பாடப்பிரிவுகளை கவனமாக பதிவு செய்யுங்கள்

டாக்டர் நாகராஜன், முன்னாள் இயக்குநர். டி.என்.இ.ஏ.,இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பான அனைத்து அறிவிப்புகளுக்கும் tneaonline.org அல்லது dte.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்க வேண்டும். ரேங்க் லிஸ்ட் கட் ஆப் அடிப்படையில் வெளியிடப்படும். கவுன்சிலிங்கில் பங்கேற்கும் கல்லுாரிகள் பற்றிய விபரங்கள் இணைய தளத்தில் ‛Information about the colleges' என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது. அதில் கல்லுாரி அமைவிடம், பாடப்பிரிவுகள், வசதிகள், கட்டண விபரங்கள் இடம் பெற்றிருக்கும்.
கட் ஆப் மதிப்பெண்ணை வைத்து படிக்க விரும்பும் கல்லுாரி, பாடப்பிரிவுகளை குறிப்பெடுத்து கொள்ள வேண்டும். கவுன்சிலிங் 3 சுற்றுகளாக நடைபெறும். முதலில் கல்லுாரி, பாடப்பிரிவுகள் தேர்வு செய்ய 3 நாட்கள் வழங்கப்படும். அதில் விருப்பமான கல்லுாரிகள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக ஒரே கல்லுாரியில் உள்ள பல பாடப்பிரிவுகள், பல கல்லுாரிகளில் ஒரே பாடப்பிரிவு, வெவ்வேறு கல்லுாரிகளில் வெவ்வேறு பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.

கல்லுாரிகளை தேர்வு செய்யும் போது கல்லுாரி பெயர், குறியீட்டு எண், பாடப்பிரிவு கவனமாக தேர்வு செய்ய வேண்டும். கல்லுாரிகள், பாடப்பிரிவுகளை 3 வது நாள் மாலைக்குள் சரி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்காவிட்டால் கணினி தானாக மாணவர்கள் தேர்வு செய்த கல்லுாரி, பாடப்பிரிவுகளை வரிசை படுத்தி கொள்ளும். கவுன்சிலிங் போது தேர்வு செய்த கல்லுாரியில் பிடித்த பாடப்பிரிவு கிடைத்தால் கல்லுாரியில் சேரலாம். அல்லது முதலில் தேர்வு செய்த கல்லுாரி, பாடப்பிரிவு கிடைக்காமல் இரண்டாவதாக தேர்வு செய்த கல்லுாரி, பாடப்பிரிவு கிடைத்தால் அதில் இணைவது அல்லது அருகில் உள்ள உதவி மையங்களில் (டி.எப்.சி.,) சான்றிதழ்களை வழங்கி 'அப்வேர்டு' செய்து காத்திருப்பது. விண்ணப்பித்த கல்லுாரிகள் கிடைக்காவிட்டால் கவுன்சிலிங்கில் இருந்து வெளியேறுவது என 3 ஆப்சன்கள் உள்ளன.

கவுன்சிலிங்கில் கல்லுாரி உறுதியானதும் அதில் இணைய வேண்டும் அல்லது அருகில் உள்ள உதவி மையங்களை அணுகி கல்லுாரியில் சேர்வது அல்லது முதலில் தேர்வு செய்த கல்லுாரிக்காக காத்திருப்பது பற்றி பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் சீட் கேன்சல் ஆகும். அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது என்றார்.

சமூக வலைதள பயன்பாட்டை குறையுங்க ஜெயபிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்:


மாணவர்கள் சமூக வலைதளங்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பாடதிட்டத்தை தாண்டி பாடம் தொடர்பாக அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக்கொள்வது வேலைவாய்ப்பு, ஊதியத்தை நிர்ணயம் செய்யும். பொறியில் மாணவர்கள் ஏ.ஐ., ஏஜென்ட் கிரியேட் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். பல இடங்களில் பொறியியல் பணிக்கு ஆட்கள் இல்லை. தொழில்நுட்பம் பெரிய மாற்றத்தை நோக்கி செல்கிறது.

கேட் தேர்விற்கு தயார்படுத்தி கொள்ளுங்கள். பொறியியல் படிப்பு தொடர்புடைய பிற படிப்புகள்கள் பற்றி கற்றுக்கொள்ளுங்கள். உதாரணமாக இ.சி.இ., படிப்பவர்கள் செமிகண்டக்டர் இன்ஜி., டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ், ரோபோடிக் டிசைன், ராணுவம் தொடர்புடை எலக்ட்ரானிக்ஸ், நானோ எலக்ட்ரானிக்ஸ் கற்றுக்கொள்ளுங்கள். அதே போல் சி.எஸ்.இ., படிப்பவர்கள் குவாண்டம் கம்யூட்டிங், பிசிகல் ஏ.ஐ., அட்வான்ஸ் ஏ.ஐ., டூல்ஸ், வைப் கோடிங் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் ரயில்வே ஒரு பல்கலை உள்ளது. அங்கு ரயில்வே தொடர்பான பாடப்பிரிவுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ரயில்வே பொறியாளராக பணிபுரிவது ஐ.ஏ.எஸ்.,க்கு சமம். கவுன்சிலிங்கில் அதிக பாடப்பிரிவு, கல்லுாரிகளை சாய்ஸ் வைத்து கொள்ளுங்கள். அதனை நோட்டில் எழுதி வைத்து கொள்ளுங்கள், அதனை சரியாக பதிவேற்றுங்கள். உதவி மையம் செல்லும் போது பதிவு செய்த அலைபேசியை எடுத்து செல்லுங்கள். சான்றிதழ்கள் வழங்கும் போது அதனை தேவையான அளவு பிரதி எடுத்துக்கொண்டு கல்லுாரிகளில் வழங்குகங்கள். வங்கி கடன் வாங்குவதாக இருந்தால் பிரதிகளில் அரசு அலுவலர்கள் கையொப்பம் பெற்று வைத்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் கவுன்சிலிங் ஐ.டி.,பாஸ்வேர்டை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றார்.

சிறந்த கல்லுாரி தேர்வே சிறந்த தீர்வு

டாக்டர் பாலாஜி, இயக்குநர், கற்பகம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங். எந்த பாடப்பிரிவு படிக்கப்போகிறோம் என முதலில் தேர்வு செய்வோம். தற்போது சரியான கல்லுாரியை தேர்வு செய்தாலே சரியான தீர்வு கிடைக்கும். கல்லுாரியில் சேர்வதற்கு முன் கல்லுாரியை பற்றி நன்றாக விசாரித்துக்கொள்ள வேண்டும்.
சிறந்த கல்லுாரிகள் மாணவர்களை ஹேக்கத்தான் உள்ளிட்ட போட்டிகளுக்கு தயார்படுத்தும். அப்டேட் தொழில்நுட்பங்களை பயிற்சி அளிக்கும் நிறுவனமாக இருக்க வேண்டும். ஆங்கில மொழி புலமையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஜெர்மனி, ஜப்பான் நிறுவனங்கள் அதிக ஊதியத்தில் இந்திய பொறியாளர்களை விரும்புகின்றனர். ஆனால் 6 மாதம் அல்லது ஓராண்டில் தங்கள் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர் என்றார்.

இலக்கை முடிவு செய்து பயணியுங்கள்

டாக்டர் மகேஸ்வரி, முதல்வர், ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி. உலகில் பொறியாளர்களுக்கு தேவை அதிகரித்து கொண்டே உள்ளது. பொறியியலில் எந்த படிப்பு எடுத்தாலும் அந்த படிப்புடன் தொடர்புடைய வேலைவாய்ப்பு பற்றி அறிந்து அதற்கு ஏற்ப படிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்றறிந்து தனித்துவதத்தை வெளிப்படுத்த வேண்டும். அனைத்து இடங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பம் வந்தாலும் மனித வேலைக்கு நிகர் ஆகாது. புதிய தொழில்நுட்பங்களை கற்கும் திறன் இருக்கும் வரை மனித சக்தியை அசைக்க முடியாது. இலக்கை முடிவு செய்து பயணியுங்கள் என்றார்.
கவுன்சிலிங் பற்றி தெளிவானது


பி.ஈஸ்வரி, பெற்றோர், ஆண்டிபட்டி.தினமலர் நாளிதழ் நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதால் சாய்ஸ் பில்லிங் ஆப்சனில் கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் தேர்வு செய்து பதிவேற்றுவது பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். கல்லுாரிகள் மட்டும் முக்கியமில்லை பாடப்பிரிவுகளும், அதனுடன் சேர்த்து மாணவர்கள் கற்றுக்கொள்ளும் பாடத்துடன் தொடர்புடைய 'கோர்' பாடப்பிரிவுகள் படிக்க வேண்டும் என தெளிவு படுத்தினர்.

நல்ல ‛ஐடியா' கிடைத்தது


கு. நந்தனா,மாணவி, தேனிகவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றது பயனுள்ளதாக இருந்தது. பாடங்களை படிப்பதை தவிர கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம் என புரிய வைத்துள்ளனர். நான் சி.எஸ்.இ., பாடப்பிரிவு மட்டும் எடுக்க நினைத்து வந்தேன். ஆனால் பிற பாடப்பிரிவுகள் படித்தால் அதன் எதிர்கால பயன்கள் பற்றியும் விளக்கினர். அதனால் பிற பாடப்பிரிவுகள் வேலைவாய்ப்புகள் பற்றியும் அறிந்து கொண்டேன். கவுன்சிலிங் போது கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் தேர்வு செய்வது பற்றி ஒரு ஐடியா கிடைத்துள்ளது. மேலும் கல்லுாரிகளில் சான்றிதழ்கள் வழங்கும் போது தேவையான அளவு பிரதி எடுத்து கொண்டு வழங்க அறிவுறுத்தியது பயனுள்ளதாக இருந்தது.

கோ ஸ்பான்சர்


இந்நிகழ்ச்சியை சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரி, கோவை காலேஜ் ஆப் இன்ஜிரியரிங் ,கோவை கற்பகம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் இணைந்து வழங்கினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us