ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள பள்ளி அகற்ற ஐகோர்ட் இடைக்கால தடை
ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள பள்ளி அகற்ற ஐகோர்ட் இடைக்கால தடை
UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:34 PM
பெங்களூரு:
துமகூரு மாவட்டம், தேவராயனதுர்கா தாலுகாவின், பெளகும்பா அஞ்சே எல்லைக்கு உட்பட்ட, வட்டரஹள்ளியில் ஜீசஸ் லவ்ஸ் மினிஸ்டரி பிரேயர் டவர் என்ற பள்ளி உள்ளது. ஸ்வேத குமாரி என்பவர் பள்ளி தலைவராக இருக்கிறார். வனப்பகுதியின் ஆக்கிரமிப்பு நிலத்தில் இப்பள்ளி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, வனத்துறையினர் ஆய்வு செய்த போது, ஸ்வேத குமாரிக்கு சொந்தமான 3.20 ஏக்கர் நிலத்துடன், கூடுதலாக நிலத்தை ஆக்கிரமித்திருப்பது தெரிந்தது. எனவே பள்ளியை அகற்றி நிலத்தை மீட்க வனத்துறை அதிகாரிகள் தயாராகினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஸ்வேதகுமாரி மனு தாக்கல் செய்தார்.
இம்மனு, விடுமுறை நாளன்று விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு அமர்வின் நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வக்கீல் விவேக் ஆனந்த அந்தோணி பிரிட்டோ, மனுதாரர் அந்த இடத்தில் 2004லிருந்து, பள்ளி நடத்துகிறார். இங்கு அனாதை ஆசிரமமும் நடத்துகிறது. இங்கு நுாற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். வனத்துறை அதிகாரிகள், திடீரென பள்ளியை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளி மீது சிலர், வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். பள்ளி கட்டடத்தை அகற்றினால், மனுதாரர் மேலும் பாதிப்படைவார். வனத்துறை தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது. சட்டவிரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும். உண்மையில் இவர் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை, என வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பள்ளியை, அப்புறப்படுத்த கூடாது. இப்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என, உத்தரவிட்டது. பள்ளியை அகற்ற வனத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.