எல்.கே.ஜி., வகுப்புக்கான நடப்பாண்டு கட்டணம் ரூ.2.72 லட்சம்?
எல்.கே.ஜி., வகுப்புக்கான நடப்பாண்டு கட்டணம் ரூ.2.72 லட்சம்?
UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:33 PM
கல்வி என்பது ஒரு தலைமுறை பெற்ற சிறந்த அறிவு, திறன்களை மற்றொரு தலைமுறைக்கு கொண்டு செல்லும் கருவியாகும். இந்த கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த மாநில அரசுகள், அரசு பள்ளிகளை நடத்தி வருகின்றன.
முக்கியத்துவம்
இந்த கல்வி கிடைக்காத ஏழை பெற்றோர், நாம் கஷ்டப்பட்டாலும், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்காக கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.
இதுபோன்று நடுத்தர குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்பதற்காக, ஆண்டுக்கு பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் சில தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் தம்பதியர், தங்கள் குழந்தைகளை மிகவும் பிரபலமான பள்ளிகளில் சேர்க்க விரும்புகின்றனர். இதற்காக அந்த பள்ளியின் வாசலில், இரவு முழுதும் காத்திருந்து, அட்மிஷன் விண்ணப்பத்தை பெற்று, சேர்க்கின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் 2025 - 26ம் ஆண்டுக்கான பள்ளி கட்டண விபரம் வெளியாகி உள்ளது.
அதில், நர்சரி வகுப்புக்கு ஆண்டு கட்டணமாக 2.51 லட்சம் ரூபாயும்; எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புக்கான கட்டணம் 2,72,400 ரூபாயும்; முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு கட்டணமாக 2,91,460 ரூபாயும்; மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு கட்டணம் 3,22,350 ரூபாய் என தனியார் பள்ளி நோட்டீஸ் ஒட்டி உள்ளது.
அத்துடன், இதை குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது, ஜூன், செப்டம்பர், டிசம்பர் என 3 தவணையில் கட்டவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில் எந்த தனியார் பள்ளி என்ற விபரம் இல்லை. இதனால், இது உண்மையா அல்லது போலியான தகவலா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆயினும், ஆண்டுக்கு சராசரியாக 50,000 ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தவே சிரமப்பட்டு வரும் நடுத்தர குடும்பத்தினருக்கு, தனியார் பள்ளியின் கட்டண விபரம் தலை சுற்ற வைத்துள்ளது.
அதிருப்தி
இது குறித்து, மென் பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
கர்நாடகாவில் ஏற்கனவே நந்தினி பால் விலை நான்கு ரூபாய் அதிகரித்து, ஒரு லிட்டர் பால் 47 ரூபாயாக உயர்ந்து உள்ளது. டீசல் விலை இரண்டு ரூபாய் அதிகரித்து, 91.02 ரூபாயாகி உள்ளது. மெட்ரோ ரயில் டிக்கெட் 60 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மின்சாரம், குப்பை வரி, காபி பவுடர் என அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து உள்ளன. கோரமங்களா, ஒயிட்பீல்டில் உள்ள இரண்டு அறைகள் கொண்ட வீட்டின் வாடகை, 40,000 ரூபாயாக உள்ளது.
பி.ஜி.,க்களிலும் அறை கட்டணம் உயர்ந்து உள்ளது. தற்போது குழந்தைகளின் பள்ளி ஆண்டு கட்டணமும் உயர்ந்து உள்ளது. கணவன் - மனைவி இருவரும் பணிக்கு சென்று கை நிறைய சம்பாதித்தாலும், பெங்களூரில் குடும்பம் நடத்துவது சிரமம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்திய ஆய்வறிக்கையில், ஹைதராபாத், மும்பையை விட, பெங்களூரில் தான் மாதந்தோறும் அதிக செலவாகிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.