தடை செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனையை தடுப்பது அரசின் கடமை உயர்நீதிமன்றம் உத்தரவு
தடை செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனையை தடுப்பது அரசின் கடமை உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : ஜூன் 24, 2025 12:00 AM
ADDED : ஜூன் 24, 2025 09:10 AM

மதுரை:
குழந்தைகள் விளையாட பயபடும் ஆபத்தான பாலிகிரிஸ்டல் பந்துவிற்கு தடை கோரிய வழக்கில் தடை செய்யப்பட்ட பொம்மைகள் மற்றும் பொருட்களின் சட்டவிரோத விற்பனையை தடுக்க, கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் கடமைப்பட்டு உள்ளன என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் கார்த்திக் கண்ணா தாக்கல் செய்த பொதுநல மனு:
பாலிகிரேலேட் கிரிஸ்டல் என்ற வண்ணமயமான பந்துகள் குழந்தைகள் விளையாட்டுக்குரிய பொருட்களாக கடைகளில் விற்கப்படுகின்றன. தண்ணீரில் ஊறவைத்து குழந்தைகள் விளையாடுகின்றனர். அளவில் சிறியதாக இருந்தாலும் தண்ணீரில் ஊறவைக்கும்போது, ரசாயன மாற்றங்களால் விரிவடைந்து பந்து போல் பெரிய ஜெல்லியாக மாறுகிறது. இதை விழுங்கினால் குடல் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படும். மரணத்தை உண்டாக்கும். இது நாப்கின்களில் ஈரத்தை உறிஞ்ச பயன்படுத்தப்படுகிறது.
கிறிஸ்டல் பந்துவில் சீனா அல்லது கொரிய மொழிகள் இடம்பெற்றுள்ளன. சில நாடுகளில் இப்பந்துகளால் பல குழந்தைகள் இறந்துள்ளன; பல குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிற நாடுகளில் இப்பந்துகள் விற்பனைக்கு தடை உள்ளது. ஆபத்தான பாலிகிரேலேட் கிரிஸ்டல் பந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும். இப்பந்துகளைக் கொண்ட பொம்மைகளை இறக்குமதி மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
மத்திய அரசு தரப்பு:
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இந்திய தர நிர்ணய அமைப்பிடமிருந்து (பி.ஐ.எஸ்.,) விபரங்கள் கோரியது. பொம்மைகளின் பாதுகாப்பு தரநிலை விபரத்தில் கிரிஸ்டல் பந்து பற்றிய குறிப்பு இல்லை. விலக்கு அளிக்கப்பட்ட தயாரிப்புகளின் பட்டியலிலும் கூட இப்பொருட்கள் பற்றி குறிப்பிடவில்லை. இந்திய தரநிலைகளுக்கு இணங்காத மற்றும் ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத பொம்மைகளை உற்பத்தி, இறக்குமதி செய்ய, விற்க அல்லது வினியோகிக்க, பாதுகாக்க, வாடகை, குத்தகைக்குவிட அல்லது விற்பனைக்கு காட்சிப்படுத்த எந்த நபருக்கும் அனுமதி இல்லை. இவ்விதிகளை மீறும் எந்தவொரு நபரும் பி.ஐ.எஸ்., சட்டம் விதிகளின் கீழ் தண்டிக்கப்படுவர்.
இவ்வாறு பதில் மனு தாக்கல் செய்தது.
தண்டனைக்குரிய குற்றம்
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: தடை செய்யப்பட்ட பொம்மைகள் அல்லது பொருட்களை விற்பனை செய்வது தண்டனைக்குரியது. மனுதாரர் அல்லது பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.
தடை செய்யப்பட்ட பொம்மைகள் மற்றும் பொருட்களின் சட்டவிரோத விற்பனையை தடுக்க, கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் கடமைப்பட்டுள்ளன. இவ்வகை பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களின் விற்பனையில் குழந்தைகளின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டுள்ளதால் பயனுள்ள கண்காணிப்பு மிக முக்கியமானது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு கூறியுள்ளனர்.