காவலர் தேர்வில் சர்ச்சைக்குரிய 3 கேள்விகள் மதிப்பெண்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு
காவலர் தேர்வில் சர்ச்சைக்குரிய 3 கேள்விகள் மதிப்பெண்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு
UPDATED : பிப் 26, 2026 04:44 PM
ADDED : பிப் 26, 2026 04:47 PM

சென்னை:
தமிழகத்தில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் இடம்பெற்றிருந்த, சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும்படி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையில், காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு, கடந்த ஆகஸ்டில் தேர்வு அறிவிப்பு வெளியானது. நவ., 9ல் தேர்வு நடந்தது.
விடை குறிப்பு, நவ., 14ல் வெளியானது. அதை சரிபார்த்ததில், ஒரு சில கேள்விகளுக்கு தவறான விடைகள் இடம் பெற்றிருந்தன. அவற்றுக்கு உரிய மதிப்பெண்களை வழங்கக்கோரி, விழுப்புரத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் தமிழரசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை, நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் டி.கோகுலகிருஷ்ணன், வி.கவுதம் குமார், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தரப்பில் சவுமி டத்தன் ஆகியோர் ஆஜராகினர்.
இருதரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தேர்வெழுதிய மனுதாரர்கள் இருவரும், முதல்கட்டமாக வாரியத்தால் வெளியிடப்பட்ட விடை குறிப்பில், வினா எண்கள் 6, 7, 13, 31 மற்றும் 52 ஆகியவற்றுக்கான விடைகள் தவறானவை என்பதை, தகுந்த ஆவணங்களுடன் ஆட்சேபித்து உள்ளனர்.
இறுதி விடை குறிப்பை வெளியிடும் முன், மனுதாரர்களின் ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளாமல் வாரியம் நிராகரித்துள்ளது.
'முதற்கட்ட விடைக்குறிப்பு வெளியிடப்பட்ட பின், ஆட்சேபனைகள் வரவேற்கப்பட்டன; சர்ச்சைக்குரிய கேள்விகள் குறித்து, நிபுணர் கருத்தும் பெறப்பட்டது.
'மேலும், எண் 6வது கேள்விக்கான பதில், பாடப் புத்தகங்களின் அடிப்படையில் திருத்தப்பட்டு, தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுவிட்டன' என, வாரியம் தெரிவித்துள்ளது.
இறுதி விடைக்குறிப்பில், சர்ச்சைக்குரிய கேள்விகள் தொடர்பான நிபுணர்களின் கருத்துகளை, இந்த நீதிமன்றம் ஆய்வு செய்தது. எனவே, சர்ச்சைக்குரிய 6, 13 மற்றும் 31ம் கேள்விகளுக்கு, தேர்வெழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், தகுந்த மதிப்பெண்களை வாரியம் வழங்க வேண்டும்.
தேர்வில் இடம்பெற்ற, 7வது கேள்விக்கான பதிலுக்கு, அதிகாரப்பூர்வ விடை இல்லாததால், மனுதாரர்கள் இருவருக்கும், அந்த கேள்விக்குரிய மதிப்பெண்களை வாரியம் வழங்க வேண்டும்.
அதே போல், 52வது கேள்விக்கு, நிபுணர்களின் கருத்துப்படி 'சி' என்ற பதிலை குறிப்பிட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
இந்த உத்தரவின் அடிப்படையில், மதிப்பெண்கள் வழங்கும் பணியை முடித்து, புதிய தேர்வு பட்டியலை வெளியிட்டு, சட்டப்படி நியமன நடைமுறையை வாரியம் துவக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

