49 மாநகராட்சி பள்ளிகளில் வசதிகள் குறித்து அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
49 மாநகராட்சி பள்ளிகளில் வசதிகள் குறித்து அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
UPDATED : ஏப் 11, 2025 12:00 AM
ADDED : ஏப் 11, 2025 10:11 PM
பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 49 மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லாதது, மாணவர்கள் பள்ளியில் சேருவது குறைப்பு தொடர்பான செய்திகள் ஊடகத்தில் வெளியாயின.
இதன் அடிப்படையில், கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரித்தது. மாநகராட்சி சார்பில் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக மாநகராட்சி தரப்பு வக்கீல் பனீந்திரா அறிக்கை தாக்கல் செய்தார்.
பின் அவர் கூறுகையில், மாநகராட்சி தரப்பில் சட்ட சேவை ஆணையத்தை தொடர்பு கொண்டனர். ஆனால், அவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்ய மறுத்துவிட்டனர். என்னை பொறுத்தவரை, பள்ளியில் சரியாக இருக்கிறது என்று நினைக்கிறேன் என்றார்.
இதற்கு தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் ஆகியோர் அடங்கிய இருவர் அமர்வு கூறியதாவது:
ஜூடிசியல் ரேங்க் அந்தஸ்து உள்ள அதிகாரி, சட்டக்கல்லுாரியில் படிக்கும் இரு மாணவர்கள் கொண்ட குழுவை, சட்ட சேவை ஆணையம் நியமிக்க வேண்டும்.
இவர்கள் சம்பந்தப்பட்ட 49 மாநகராட்சி பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை, துாய்மை உட்பட அடிப்படை வசதிகள் உள்ளனவா, மாணவர்களின் சுகாதாரம் எப்படி உள்ளது என்பதை இன்று முதல் ஒரு மாதத்துக்குள் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கு, ஜூன் 12ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

