துறை தலைவர்கள் நியமனம் திருத்தத்தை உறுதி செய்தது ஐகோர்ட்
துறை தலைவர்கள் நியமனம் திருத்தத்தை உறுதி செய்தது ஐகோர்ட்
UPDATED : பிப் 26, 2025 12:00 AM
ADDED : பிப் 26, 2025 07:46 PM

சென்னை:
சென்னை பல்கலையில், துறைத் தலைவர்களை, தகுதி, திறமை அடிப்படையில், சுழற்சி முறையில் நியமிப்பதற்காக கொண்டு வரப்பட்ட, திருத்தத்தை உறுதி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலையில், துறைத் தலைவர்களை, தகுதி, திறமை அடிப்படையில், சுழற்சி முறையில் நியமிக்க, பல்கலை விதியில், கடந்த 2023ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு பல்கலை சிண்டிகேட் மற்றும் செனட் ஒப்புதல் அளித்தது. இந்த திருத்தத்தை எதிர்த்து, பல்கலை கிரிமினாலஜி துறைத் தலைவர் எம்.சீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உயர் கல்வித் துறை தரப்பில், சிறப்பு பிளீடர் டி.ரவிச்சந்தர், பல்கலை தரப்பில் வழக்கறிஞர் வி.சுதா ஆகியோர் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பல்கலையில் தகுதி அடிப்படையில் இருக்கக்கூடிய, மூத்த பேராசிரியர்கள் அனைவருக்கும், துறைத் தலைவர் பதவி வகிக்க, சம வாய்ப்பு வழங்க, இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, சம்பந்தபட்ட துறை மேம்பாட்டுக்கு உதவும். துறைத் தலைவர் என்பது பொறுப்பு. இது பதவி உயர்வு அல்ல. அதேபோல், பேராசிரியருக்கு உள்ள பணி நிபந்தனைதான், துறைத் தலைவருக்கும் உள்ளது.
அதிக ஊதியம் கிடையாது. அவ்வாறு இருக்கும் போது, விதிகளில் திருத்தம் செய்ததில், எந்த விதி மீறலும் இல்லை. எனவே, இதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.