புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது: அமைச்சர் பொன்முடி
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது: அமைச்சர் பொன்முடி
UPDATED : பிப் 26, 2025 12:00 AM
ADDED : பிப் 26, 2025 07:48 PM

விழுப்புரம்:
தாய்மொழியில் கல்வி பயில்வதால் நன்கு புரிதல் உணர்வோடு கல்வி பயில முடியும் என அமைச்சர் பொன்முடி பேசினார்.
தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை, சென்னை மாநகர நுாலக ஆணைக்குழு, சமூகநீதி கண்காணிப்பு குழு மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழா விழுப்புரத்தில் நடந்தது.
அரசு கலை கல்லுாரியில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., சமூகநீதி கண்காணிப்பு குழு தலைவர் சுபவீரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்மொழிக்காக, இனத்திற்காக, அடிதட்டு மக்களுக்காக தனது ஆட்சியின் போது பல சிறப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளார். அதனால் தான், இங்கு ஆண்களை விட பெண்களே அதிகளவில் உயர்கல்வி வரை பயின்று வருகின்றனர். இதை தற்போதைய தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
தாய்மொழியில் கல்வி பயில்வதால் நன்கு புரிதல் உணர்வோடு கல்வி பயில முடியும். ஆங்கில வழிக்கல்வி என்பது நம் அன்றாட உலகறிவு சிந்தனைகள் மற்றும் அன்றாட தேவைகளின் பயன்பாட்டிற்கு ஆங்கில வழிக்கல்வி பயில்கிறோம். தமிழகத்தில் இருமொழி கல்வியே நமக்கான கல்வி முறையாகும்.
தற்போதைய தலைமுறை மாணவ, மாணவிகள் புதிய கல்விக் கொள்கை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இந்த புதிய கல்விக் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணை சேர்மன் ஷீலாதேவி சேரன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன், சமூகநீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜேந்திரன், அரசு கல்லுாரி முதல்வர் சிவக்குமார், இயற்பியல் துறை இணை பேராசிரியர் சேட்டு உட்பட பலர் பங்கேற்றனர்.