எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக தேர்ச்சி; கோலார் மாவட்ட கலெக்டர் அறிவுரை
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக தேர்ச்சி; கோலார் மாவட்ட கலெக்டர் அறிவுரை
UPDATED : டிச 15, 2025 10:15 PM
ADDED : டிச 15, 2025 10:16 PM
கோலார்:
''எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி எண்ணிக்கையை அதிகரிக்கும் வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும்,'' என்று கோலார் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி அறிவுறுத்தினார்.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிகளவு மாணவர்கள் தேர்ச்சி பெற கல்வித் துறை அதிகாரிகளுடன் கோலார் கலெக்டர் ரவி தலைமையில், கோலாரில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், கலெக்டர் ரவி பேசியதாவது:
கல்வி கற்பித்தலில் பயனுள்ள திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கடந்தாண்டு தேர்வு முடிவில், கல்வித் துறை என்ன பாடங்களை கற்றுக் கொண்டது. குறைபாடுகளை கண்டறிந்து, சரி செய்யாவிட்டால், அதே தவறுகள் மீண்டும் நிகழும்.
தற்போது வகுக்கப்பட்ட கல்வித் துறையின் செயல் திட்டம் 89 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை பற்றி பெருமை மட்டுமே பேசுகிறது.
தோல்வி அடைந்த மாணவர்களை கருத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் தேர்ச்சி எண்ணிக்கையை அதிகரிக்கும் வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும். சமூக பொருளாதார பின்னணி, மொழி பிரச்னைகள் காரணமாக பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து உரிய தீர்வு காண வேண்டும்.
தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர் களிடம் தன்னம்பிக்கை வளர்ப்பது முக்கியம். ஆசிரியர்கள் கனிவுடன் செயல்பட வேண்டும். தனியார் பள்ளிகளின் நிர்வாக அமைப்புகளும் பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட கல்வி இயக்குனர் பர்வீன் தாஜ் கூறுகையில், ''கோலார் மாவட்டத்தில் 396 உயர்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 18,160 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
தேர்வுக்கு தயாராகும் வகையில் குறைந்தது மூன்று மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன,'' என்றார்.
கோலார் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி பிரவீன் பி. பாகியவாடி, சமூக நலத்துறை இணை இயக்குனர் எம்.சீனிவாசன், சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் மைலாரப்பா, உணவுத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, அனைத்து கள கல்வி அலுவலர்கள், விரிவுரையாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

