ஆந்திராவில் 3,000 ஏக்கரில் அமைகிறது பாபா ஆராய்ச்சி மைய புதிய வளாகம்
ஆந்திராவில் 3,000 ஏக்கரில் அமைகிறது பாபா ஆராய்ச்சி மைய புதிய வளாகம்
UPDATED : டிச 15, 2025 10:16 PM
ADDED : டிச 15, 2025 10:18 PM

அமராவதி:
ஆந்திராவின் அனஹாபள்ளி மாவட்டத்தில், 3,000 ஏக்கர் பரப்பளவில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாபா அணு ஆராய்ச்சி மையம், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகத்தை, ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகில் உள்ள கிழக்கு கடற்கரைக்கு அருகே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, மத்திய அரசின் தள தேர்வு குழுவின் பரிந்துரையின்படி, 3,000 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 366 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி இருப்பதால், அதற்குரிய மாற்று நிலத்தை முன்மொழிய ஆந்திர அரசை அணுகியது. இதையடுத்து, ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிலத்துக்கு அருகே மாற்று நிலத்தையும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
இதுதொடர்பாக நிபுணர் மதிப்பீட்டு குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்படி, 21,244 மரங்களில் 1,722 மரங்கள் வெட்டப்படும் எனவும், கடற்கரைக்கு அருகே உள்ள மரங்கள் வெட்டப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையம், அணுசக்தி துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் தேசத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிக்கும் எனவும் அக்குழு தெரிவித்துள்ளது.

