கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு அவசியம்: வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் வலியுறுத்தல்
கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு அவசியம்: வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் வலியுறுத்தல்
UPDATED : செப் 29, 2026 03:11 PM
ADDED : செப் 29, 2026 03:12 PM
சென்னை:
“மத்திய, மாநில அரசுகள், கல்வி மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்,” என, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலசங்கம் மற்றும் சென்னை பல்கலை இணைந்து நடத்திய, 19வது மாநில மகளிர் மேம்பாட்டு கருத்தரங்கம், சென்னை மாநிலக்கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
கருத்தரங்கில், கல்வி, சமூக சேவை, விவசாயம் மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றில் சிறந்து விளங்குவோருக்கு, 'பீனிக்ஸ்' விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில், மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க செயல்பாடுகள், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் சார்ந்த தகவல்கள் அடங்கிய கையேட்டை, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் வெளியிட்டார்.
பின், அவர் பேசியதாவது:
பொருளாதார ரீதியாக நாடு வளர்ச்சி அடைய வேண்டுமெனில், கல்வியில் வளர வேண்டும். நம் நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை, 30 சதவீதமாக உள்ளது.
ஆனால், தேசிய சராசரியை காட்டிலும், தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை, 50 சதவீதமாக உள்ளது. தென் மாநிலங்களின் உயர்கல்வி சேர்க்கை, 40 சதவீதத்துக்கும் அதிகம்.
அதேநேரம், பெரிய மாநிலங்களான பீகாரில் 18 சதவீதமாகவும், உத்திரபிரதேசத்தில் 25 சதவீதமாகவும் பின்தங்கிய நிலை உள்ளது.
பெரிய மாநிலங்கள், உயர்கல்வியில் முன்னேறாமல், நம் நாடு பொருளாதாரத்திலும், கல்வியிலும் முன்னேற முடியாது.
எனவே, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம் கல்விக்காக செலவிட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால், நாம் ஒருபோதும், 3.5 சதவீதத்தை கடந்தது கிடையாது.
நடப்பாண்டு, மத்திய அரசின் பட்ஜெட்டில், வெறும் 2.5 சதவீதம் தொகை மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால்தான், ஏழைகளும், நடுத்தர மக்களும், இன்னும் கல்வி வாய்ப்புகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு உள்ளனர்.
நாட்டில் தற்போது, 16 கோடி பேர் உயர்கல்வி பெறத் தகுதி பெற்றுள்ளனர்; ஆனால், அவர்களில், நான்கு கோடி பேர் மட்டுமே உயர்கல்வி படிக்கின்றனர்.
நம் மக்கள் தொகை சூழலை கணக்கிட்டு, உயர்கல்வி சேர்க்கையை பெறுக்க வேண்டும். அப்போதுதான், நாம் வளர்ந்த நாடாக மாற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
