UPDATED : அக் 16, 2024 12:00 AM
ADDED : அக் 16, 2024 11:36 AM

ஜப்பானில் கல்வி பயில விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கும் வகையில், 'ஜே.ஏ.எஸ்.எஸ்.ஒ.,' எனும் மாணவர் சேவைகள் அமைப்பை, ஜப்பான் அரசு செயல்படுத்தி உள்ளது.
பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பிரத்யேக நுழைவுத் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கையை மேற்கொள்கின்றன. ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. சர்வதேச மாணவர்கள் குறைந்தது 9 மாதங்களுக்கு முன்பே சேர்க்கைக்கான முயற்சிகளை துவக்க வேண்டும். இந்திய மாணவர்கள் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ரோபாட்டிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஹெல்த் கேர் ஆகிய துறைகளில் ஆர்வம் செலுத்துவதை காண முடிகிறது. குறிப்பாக, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேர ஆர்வம் செலுத்துகின்றனர்.
ஜப்பானில் உயர்கல்வி பயில ஜப்பானிய மொழி கற்பது அவசியம் இல்லை; எனினும், சக ஜப்பானிய மாணவர்களுடன் உரையாடவும், எதிர்காலத்தில் ஜப்பானுடன் தொடர்ந்து நல்லுறவை மேற்கொள்ளவும், வேலை வாய்ப்பிற்காகவும் ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்வது மிகவும் வரவேற்கப்படுகிறது. மாணவர்களின் தேவை மற்றும் படிப்பை பொறுத்து, பாடத்திட்டத்துடன் ஜப்பானிய மொழி கற்பிக்கப்படுகிறது.
'மெக்ஸ்ட்' உதவித்தொகை
ஜப்பானின் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஓர் மதிப்புமிக்க திட்டமே, 'மெக்ஸ்ட் உதவித்தொகை'. ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை திட்டத்திற்கு, ஜப்பானிய அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது. இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ், இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் சர்வதேச மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் சர்வதேச மாணவர்கள், ஜப்பான் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. போக்குவரத்து, தங்குமிடம், உணவு என அனைத்து செலவீனங்களுக்கும் நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஆவணங்கள் சரிபார்ப்பு, நுழைவுத்தேர்வு, நேர்காணல், ஜப்பான் தூதரகத்தின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த மதிப்புமிக்க உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். போட்டி நிறைந்த இத்திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் சில முன்னெடுப்புகளை மேற்கொள்வது அவசியம். இது தவிர, ஜப்பான் அரசு மற்றும் பல்கலைக்கழகங்கள் பல்வேறு பகுதி உதவித்தொகை திட்டங்களை சர்வதேச மாணவர்களுக்கு வழங்குகின்றன.
சென்னை ஜப்பான் எக்ஸ்போ
தமிழக மாணவர்களின் பல்வேறு கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து சார்ந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் சென்னையில் உள்ள வி.ஆர்., மாலில் நவம்பர் 9ம் தேதி காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சி நடைபெற உள்ளது.
ஜப்பானின் கல்வி முறை, பல்கலைக்கழகங்கள், பாடப்பிரிவுகள், மாணவர் சேர்க்கை முறை, தகுதிகள், தேவையான ஆவணங்கள், உதவித்தொகை திட்டங்கள், வேலை வாய்ப்பு உட்பட ஏராளமான தகவல்களுக்கு https://www.jasso.go.jp/en/index.html மற்றும் https://www.studyinjapan.go.jp/en/ ஆகிய இணையதளங்களை பார்க்கலாம்.
-தேரோகா மாமி, ஆலோசகர், கலாச்சாரம் மற்றும் தகவல், ஜப்பான் துணை தூதரகம், சென்னை.
educationcgj@ms.mofa.go.jp