UPDATED : அக் 17, 2024 12:00 AM
ADDED : அக் 17, 2024 09:51 AM
கொடைக்கானல் :
கொடைக்கானல் பெரியூர் அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்கள் இல்லாமலே மாணவர்களுடன் பள்ளி செயல்படுவதாக மாயை ஏற்படுத்தியது தொடர்பான தினமலர் செய்தி எதிரொலியாக தலைமை ஆசிரியரை மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
கொடைக்கானல் வெள்ளகெவி ஊராட்சி பெரியூர் அரசு துவக்க பள்ளியில் மாணவர்கள் இல்லாத நிலையில் பல ஆண்டுகள் பள்ளி செயல்பட்டது போன்ற மாயையை ஏற்படுத்தி அதிகாரிகளின் உடந்தையுடன் ஆண்டு கணக்கில் சம்பளம் விடுவிக்கப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் உஷா ,மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஜான் பிரிட்டோ ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில் வட்டார கல்வி அலுவலர் பழனிராஜ், தலைமை ஆசிரியர் ராஜகோபால் , வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோர் விசாரணை செய்யப்பட்டனர். தவறுகள் நடந்துள்ளது அறியப்பட்டதால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மாவட்டதொடக்க கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ கூறுகையில் திண்டுக்கல் கலெக்டர் உத்தரவின் படி முறைகேட்டில் ஈடுபட்ட தலைமையாசிரியர் ராஜகோபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இப்பள்ளியில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து தொடர் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.மலைப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இது போன்ற தவறுகள் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
கல்வி அதிகாரிகள் கரிசனம்
பெரியூர் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில் பள்ளியை கண்காணிக்க தவறிய வட்டார கல்வி அலுவலர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது கல்வித்துறை அதிகாரிகள் கரிசனம் காட்டி உள்ளனர். இதில் உள்நோக்கம் உள்ளதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் நடந்துள்ள தவறுகள் குறித்து தனி அதிகாரியை நியமித்து இங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளி, ஒன்றிய துவப்பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் கல்வித்துறையில் நடந்துள்ள தவறுகள் வெளிச்சத்திற்கு வரும். மாணவர்களின்றி பள்ளி செயல்பட்டது போன்ற மாயையை ஏற்படுத்தியதற்கு காரணமான துறை ரீதியான அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாது. நடவடிக்கை மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக அமையும்.