உயர்வுக்கு படி வழிகாட்டி முகாம் 11 பேருக்கு கிடைத்த உயர்கல்வி வாய்ப்பு
உயர்வுக்கு படி வழிகாட்டி முகாம் 11 பேருக்கு கிடைத்த உயர்கல்வி வாய்ப்பு
UPDATED : செப் 23, 2024 12:00 AM
ADDED : செப் 23, 2024 08:47 AM

திருப்பூர்:
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உயர்வுக்கு படி வழிகாட்டி முகாமில், 11 மாணவர்களுக்கு கல்லுாரி சேர்க்கைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காக, நான் முதல்வன் திட்டத்தில், உயர்வுக்கு படி என்கிற உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், உயர்வுக்கு படி திட்டத்தை செயல்படுத்துவதற்காக, கலெக்டர் அலுவலகத்தில் வழிகாட்டி உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ம் தேதிவரை நான்கு கட்டங்களாக உயர்வுக்கு படி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இம்முகாம்கள் மூலம், மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த 23 ஆயிரத்து 500 மாணவர்களில், 21 ஆயிரத்து 500 பேர் கல்லுாரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, பொதுத்தேர்வு எழுதாத மற்றும் தேர்வு எழுதி வெற்றிபெறாத, தேர்ச்சி பெற்றும் உயர் கல்விக்கு செல்லாத மாணவர்களுக்கு மூன்று கட்டங்களாக முகாம் நடத்தப்படுகிறது.
கடந்த, 11ம் தேதி குமரன் கல்லுாரியிலும்; 14ம் தேதி தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில்; 18ம் தேதி உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று, உயர்வுக்கு படி முகாம் நடைபெற்றது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றும் கல்லுாரியில் இடம் கிடைக்காத, தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முகாமில், 11 மாணவர்களுக்கு கல்லுாரி சேர்க்கைகான உத்தரவை, கலெக்டர் வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு, மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேலாளர் துர்காபிரசாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.