UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 09:37 AM

கோவை:
பாரதியார் பல்கலை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், பல்கலை பேராசிரியர்களுக்கு, தொழில் நுட்ப வளர்ச்சிக்கான அறிவுசார் சொத்துக்களை வணிக மயமாக்குவது; கட்டமைப்பு உருவாக்குதல் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
பாரதியார் பல்கலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. பல்கலையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் சூழலில் காப்புரிமை குறித்த விழிப்புணர்வு போதியளவில் இல்லாமல் இருந்தது. இதற்காக அறிவு சார் மையம் துவக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தற்போது, கண்டுபிடிப்புகளை வணிகப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு மைய இயக்குனர் பரிமேலழகன், தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் அறிவுசார் சொத்துக்கள் வகிக்கும் முக்கிய பங்கு குறித்து விளக்கம் அளித்தார். அறிவு சார் சொத்துரிமை மைய இயக்குனர் சுமதி, கண்டுபிடிப்புகளை நிர்வகிப்பது மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை சந்தைப்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுவது குறித்து தெளிவுபடுத்தினார்.
ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும், வணிகமயமாக்கல் நிதி உதவிகள் பெரும் வழிமுறைகள் குறித்து, பேராசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பல்கலை துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் லவ்லினா லிட்டில் பிளவர், பல்கலை பதிவாளர் ரூபா குணசீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.